Saturday, November 4, 2017

அந்த மழைக்காலம்

எண்பதுகளின் தொடக்கத்தில் நாங்கள் மந்தைவெளியில் ராமகிருஷ்ண மடம் சாலையில் ராணி மெய்யம்மை பெண்கள் மேநிலைப்பள்ளியின் எதிரில் குடியிருந்தோம்.
எங்கள் தந்தையார் அங்கே வியாபாரம் செய்து வந்தார்கள். கடைக்கு பின்பகுதியில் எங்கள் வீடு.
ஈஸ்வரி ஸ்டோர்ஸ் என்றால் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். அட்டைபெட்டிக்கடைக்கு பக்கத்தில் என்று அடையாளம் சொல்லும் அளவிற்கு பிரபலம்.
தாத்தா காலத்தில் பழைய பேப்பர் வியாபாரம் செய்து வந்த நிலையில் தம்பி தன் பிடிவாதத்தால் அட்டைபெட்டிக்கடையாக மாற்றினான்.
தம்பிக்கு அந்த காலகட்டத்திலேயே நல்ல செல்வாக்கு உண்டு.
கடைக்கு எதிரே சென்னை தொலைபேசிக்கு சொந்தமான காலியிடம். (இப்போது அங்கே இணைப்பகம் செயல்படுகிறது).
அடையாறில் இருந்து வரும் பேருந்துகள் எங்கள் கடைக்கு எதிரே இருந்த நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி ஏற்றிச்செல்லும்.
ஒரு சில பேருந்து ஓட்டுநர்கள் சிநேகமாக கையசைத்துச் செல்வார்கள்.
1980ல் நாங்கள் அங்கு குடியேறிய நேரம். மாருதி கார் வராத நேரம், பைக்குகளில் புல்லெட்டும் ராஜ்தூத்தும், ஸ்கூட்டரில் லேம்பிரட்டாவும், விஜய், பியாஜியோவும், மொபட்டில் ஹீரோ மெஜஸ்டிக்கும் தான் வாகனம். சைக்கிளும், டிரைசைக்கிளும் தள்ளுவண்டிகளும் சாதாரணமாக செல்லும். மந்தைவெளியில் இருந்து அடையாறு நோக்கிச் செல்லும் போது எங்கள் வீட்டுப்பகுதியில் மேட்டில் இருந்து இறக்கம் போல் சாலை சற்று சரிவாக இருக்கும். தள்ளுவண்டியில் செல்பவர்கள் இலகுவாக வண்டியை தள்ளிச் செல்வதை பார்த்து ரசிப்போம். கோலிசோடா ஏற்றிய தள்ளுவண்டியை திடகாத்திரமான நபர் மிகவும் அநாயசமாக இழுத்துச் செல்வார்.
மந்தைவெளியில் இருந்து அடையாறு நோக்கிய பாதையில் எங்கள் கடை தான் கடைசிக் கடை.
இரவு 7 மணிக்கு மேல் இருட்டும், சந்தடியற்ற சாலையும் நம்மை பயமுறுத்தும்.
மழைக்காலங்களில் பள்ளிக்கு விடுமுறை என்பது தவிர்க்க முடியாத ஒன்று. பள்ளிக்கு விடுமுறை என்றால் எங்கள் கடையில் கூடுதல் நேரம் செலவழிப்பதும்தான் எங்கள் பணி. கடையில் அப்பாவிடம் கதை பேசுவதற்கும் எங்களுடன் பேசுவதற்கும் யாராவது வந்து கொண்டே இருப்பார்கள். அவர்களுடன் பேசுவது தான் பொழுது போக்கு.
மழைக்காலம் என்றால் எங்கள் கடையை சாரல் பெரிதும் சேதப்படுத்தும். பருவமழைக்காலங்களில் நாள் கணக்கில் கடையில் வியாபாரம் இருக்காது.
ஆள் நடமாட்டமே இல்லாமல் நாங்கள் வெட்டிக் கதை பேசி நேரம் கழிப்போம். காகிதக் கப்பல் செய்து பிளாட்பாரத்தை ஒட்டினார்போல ஓடும் மழைநீரில் விட்டு வேடிக்கை பார்ப்போம். யார் கப்பல் முதலில் மூழ்குகிறது என்பது தான் எங்கள் பொழுது போக்கு.
1982 அல்லது 83 ஆக இருக்கும். புயல் நேரம். கடையில் வியாபாரம் இல்லை. வீட்டுத் தேவைக்கு காய்கறி வாங்கக்கூட போக முடியாத அளவு மழை. காய்கறிக்கடைக்காரர்கள் கூட காய்கறி வாங்க
கொத்தவால் சாவடிக்கு சென்று இருப்பார்களா தெரியாது.
இயல்பு வாழ்க்கையே முடங்கிப் போய் இருந்த நேரம். அம்மா வந்து, அய்யா, ஏதாவது காய்கறி வாங்கி வந்தால் தான் இன்று சாப்பாடு என்றார். மழையோ பலத்த காற்றுடன் சீறிக் கொண்டிருந்தது.
கடைக்கு யாராவது வரமாட்டார்களா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது சடசட வென்று மரம் முறிந்து விழும் சத்தம் கேட்டது. கடைக்கு எதிரே பிரமாண்டமாக வளர்ந்திருந்த காட்டு மரம்தான் முறிந்ததோ என்று பார்த்தோம். (தீக்குச்சி தயாரிக்க பயன்படுமாம். பூ செக்கச் செவேரென்று இருக்கும்)
ஆனால் பக்கத்து வீட்டில் இருந்த முருங்கை மரம் முறிந்து விழுந்தது.
நல்ல வேளை யாருக்கும் சேதம் இல்லை. பக்கத்து வீட்டுக்காரர்கள் மிகவும் அன்பானவர்கள்.
அவர்கள் கை கொள்ளாத அளவு முருங்கைக் கீரையையும், கை நிறைய முருங்கைக் காயையும் கொடுத்துச் சென்றார்கள்.
அம்மாவும் சகோதரிகளும் முருங்கை இலையை ஆய்ந்து சமைத்தார்கள்.
பகல் ஒரு மணிக்கு சுடச்சுட முருங்கைக் கீரையும்,முருங்கைக்காய் கூட்டுடன் சோறும் சாப்பிட்ட அந்த நாளையும் மறக்க முடியாது. அந்த சுவையும் இன்னும் நாக்கில் இருக்கிறது. எத்தனை பெரிய ஓட்டல்களில் சாப்பிட்டாலும் அந்த நாள் சாப்பிட்ட அந்த முருங்கைக் கீரை சாப்பாட்டுக்கு ஈடில்லை.

Saturday, October 8, 2016

நங்கநல்லூர் ரோடும் 40 வருடமும்

சமீபத்தில் சென்னை விமான நிலையம்- சின்னமலை இடையே மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த சேவை தொடங்கப்பட்ட போது என்னை வியப்பிற்குள்ளாக்கிய ஒன்று, இந்த இரண்டு ரெயில் நிலையங்களிடையே அமைந்துள்ள நங்கநல்லூர் ரோடு என்ற ரெயில் நிலையம் தான்.

திண்டுக்கல்லுக்கு அடுத்தபடியாக கொடைரோடு என்று ஒரு ரெயில் நிலையம் வரும். கொடைக்கானல் செல்பவர்கள் வசதிக்காக அந்த ரெயில் நிலையம் அமைக்கப்பட்டது. சிறுவயதில் எங்கள் ஊருக்கு நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிக்கும் போது நள்ளிரவில் இந்த ரெயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று செல்வதைக் கண்டுள்ளேன். அது போல் சேலம் செல்லும் வழியில் வாழப்பாடி ரோடு என்று ஒரு ரெயில் நிலையமும் வருகிறது. வாழப்பாடிக்கு செல்பவர்களுக்கு அந்த ஊருக்கு பின்புறம் அமைந்த இந்த ரெயில் நிலையம் பயனளிக்கும் விதமாக அமைக்கப்பட்டு இருந்தது.

அந்த வகையில் நங்கநல்லூர் ரோடு ரெயில் நிலையமும் அமைக்கப்பட்டுள்ளதோ என்று எண்ணினேன். ரெயில் நிலையம் அமைந்துள்ள இடத்தின் அருகில் எவ்வித சாலையும் நங்கநல்லூருக்கு செல்லவில்லை. ஆதம்பாக்கத்திற்கும் தில்லை கங்கா நகருக்கும் செல்வதற்கு வேளச்சேரி நெடுஞ்சாலை உள்ளது.

மற்றபடி இந்திய இராணுவத்தின் பெருமக்குரிய அதிகாரிகள் பயிற்சி அகாடமி (ஓ.டி.ஏ.) இந்த ரெயில் நிலையத்தின் நேர் எதிரே அமைந்து உள்ளது. இந்தியாவில் சென்னையிலும் மிகச் சமீபத்தில் பீகாரில் உள்ள கயாவிலும் தான் அதிகாரிகள் பயிற்சி அகாடமி உள்ளது. தொன்மை வாய்ந்த ஓ.டி.ஏ. பெயரை சூட்டாமல் எங்கோ இருக்கிற நங்கநல்லூரை தொடர்பு படுத்தி நங்கநல்லூர் ரோடு என்று பெயரிட்டது என்ற ஆர்வம் எனக்கு ஏற்பட்டது.  அதன் பின்னர் நான் நங்கநல்லூருக்கு ஒருமுறை விஜயம் செய்தேன்.

சென்னை அண்ணாநகரை நினைவு படுத்தும் வகையில் பல சாலைகள் அகலமாகவும் நேர்த்தியாகவும் இருந்தன. ஒரு கிரவுண்ட் நிலத்தில் சிறிய வீடு வீட்டைச்சுற்றி காலியிடங்கள் என 1970களில் வீடு கட்டியவர்களின் மனப்போக்கை நங்கநல்லூர் நன்றாக படம் பிடித்துக் காட்டியது. இப்போது தான் பழைய வீடுகள் இடிக்கப்பட்டு அடுக்கு மாடி வீடுகள் கட்டப்படுகின்றன. குறிப்பாக சொல்லப் போனால் அக்ரஹாரம் என்று அழைக்கப்படும் அளவிற்கு இந்த இடத்தை சுற்றிலும் பிராமணர்கள் அதிகம் இருகிறார்கள். பக்கத்தில் பழவந்தாங்கலில் தான் நெரிசல் காணமுடிகிறது. நங்கநல்லூரை ஒட்டியுள்ள உள்ளகரம், தில்லைகங்கா நகர், பழவந்தாங்கல் மூவரசம்பேட்டை ஆகிய பகுதிகளுக்கும் நங்கநல்லூருக்கும் இடையே நல்ல வித்தியாசம் உள்ளது.

1960களின் இறுதியில் இப்பகுதி விவசாய விளை நிலமாக இருந்துள்ளது. எழுபதுகளின் தொடக்கத்தில் பிளாட் போடப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. மைலாப்பூரில் வீடு வாங்க முடியாதவர்கள் சொல்லிவைத்து வாங்கியது போல் தங்களுக்கென்று கூட்டாக வாங்கி தங்களுக்கென்று தனியிடத்தை அமைத்துக் கொண்ட இடமாகத்தான் நங்கநல்லூர் இருக்கிறது. ரியல் எஸ்டேட் காரர்கள் இவர்களை கவரவேண்டும் என்ற காரணத்திற்காக கோவில்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்திருப்பதும் தெளிவாக தெரிகிறது. அருகாமையில் உள்ள தில்லைகங்கா நகருக்கு பெயர் சூட்டப்பட்டதும் இந்த நோக்கத்தில் தான்.
புராணகாலத்தில் பிரபலமாக இருந்து பழவந்தாங்கல் (பல்லவன்தாங்கல் என்றும் அழைக்கிறார்கள்) கிராமத்தின் அடையாளங்கள் மாறிவிட்டன.

இந்த கிராமத்தில் 60களின் இறுதியில் 70களின் துவக்கத்தில் புறநகர் ரெயில் நிலையம் அமைக்கப்பட்டபோது அதற்கு நங்கநல்லூர் என்று பெயரிடவேண்டும் என்று நங்கநல்லூர் வாசிகள் தங்களுக்கு இருந்த செல்வாக்கையெல்லாம் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் பழவந்தாங்கல் வாசிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த போராட்டம் காரணமாக பழவந்தாங்கல் என்று அந்த ரெயில் நிலையத்திற்கு பெயர் சூட்டப்பட்டது. தங்கள் ஆதிக்கம் செல்லுபடியாகவில்லையே என்று கறுவிக்கொண்டிருந்தவர்களுக்கு மெட்ரோரெயில் வரப்பிரசாதமாக அமைந்தது. தங்கள் முழுபலத்தை இதில் காட்டி வெற்றி பெற்று இருப்பது தெளிவாகத் தெரிகிறது.


40 ஆண்டுகாலம் காத்திருந்து தங்கள் எண்ணத்தை இப்போது ஈடேற்றிக் கொண்டார்கள். இதற்கு பெரிதாக எதிர்ப்பு கிளம்பாததற்கு நம் ஊடகங்களும் அதில் உள்ளவர்களுக்கு எந்த ஆர்வமும் இல்லாமல் இருப்பதும்தான் காரணம் என்றும் சொல்லலாம்.

நங்கநல்லூர் ரோடும் 40 வருடமும்

சமீபத்தில் சென்னை விமான நிலையம்- சின்னமலை இடையே மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த சேவை தொடங்கப்பட்ட போது என்னை வியப்பிற்குள்ளாக்கிய ஒன்று, இந்த இரண்டு ரெயில் நிலையங்களிடையே அமைந்துள்ள நங்கநல்லூர் ரோடு என்ற ரெயில் நிலையம் தான்.திண்டுக்கல்லுக்கு அடுத்தபடியாக கொடைரோடு என்று ஒரு ரெயில் நிலையம் வரும். கொடைக்கானல் செல்பவர்கள் வசதிக்காக அந்த ரெயில் நிலையம் அமைக்கப்பட்டது. சிறுவயதில் எங்கள் ஊருக்கு நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிக்கும் போது நள்ளிரவில் இந்த ரெயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று செல்வதைக் கண்டுள்ளேன். அது போல் சேலம் செல்லும் வழியில் வாழப்பாடி ரோடு என்று ஒரு ரெயில் நிலையமும் வருகிறது. வாழப்பாடிக்கு செல்பவர்களுக்கு அந்த ஊருக்கு பின்புறம் அமைந்த இந்த ரெயில் நிலையம் பயனளிக்கும் விதமாக அமைக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் நங்கநல்லூர் ரோடு ரெயில் நிலையமும் அமைக்கப்பட்டுள்ளதோ என்று எண்ணினேன். ரெயில் நிலையம் அமைந்துள்ள இடத்தின் அருகில் எவ்வித சாலையும் நங்கநல்லூருக்கு செல்லவில்லை. ஆதம்பாக்கத்திற்கும் தில்லை கங்கா நகருக்கும் செல்வதற்கு வேளச்சேரி நெடுஞ்சாலை உள்ளது.மற்றபடி இந்திய இராணுவத்தின் பெருமக்குரிய அதிகாரிகள் பயிற்சி அகாடமி (ஓ.டி.ஏ.) இந்த ரெயில் நிலையத்தின் நேர் எதிரே அமைந்து உள்ளது. இந்தியாவில் சென்னையிலும் மிகச் சமீபத்தில் பீகாரில் உள்ள கயாவிலும் தான் அதிகாரிகள் பயிற்சி அகாடமி உள்ளது. தொன்மை வாய்ந்த ஓ.டி.ஏ. பெயரை சூட்டாமல் எங்கோ இருக்கிற நங்கநல்லூரை தொடர்பு படுத்தி நங்கநல்லூர் ரோடு என்று பெயரிட்டது என்ற ஆர்வம் எனக்கு ஏற்பட்டது.  அதன் பின்னர் நான் நங்கநல்லூருக்கு ஒருமுறை விஜயம் செய்தேன்.
சென்னை அண்ணாநகரை நினைவு படுத்தும் வகையில் பல சாலைகள் அகலமாகவும் நேர்த்தியாகவும் இருந்தன. ஒரு கிரவுண்ட் நிலத்தில் சிறிய வீடு வீட்டைச்சுற்றி காலியிடங்கள் என 1970களில் வீடு கட்டியவர்களின் மனப்போக்கை நங்கநல்லூர் நன்றாக படம் பிடித்துக் காட்டியது. இப்போது தான் பழைய வீடுகள் இடிக்கப்பட்டு அடுக்கு மாடி வீடுகள் கட்டப்படுகின்றன. குறிப்பாக சொல்லப் போனால் அக்ரஹாரம் என்று அழைக்கப்படும் அளவிற்கு இந்த இடத்தை சுற்றிலும் பிராமணர்கள் அதிகம் இருகிறார்கள். பக்கத்தில் பழவந்தாங்கலில் தான் நெரிசல் காணமுடிகிறது. நங்கநல்லூரை ஒட்டியுள்ள உள்ளகரம், தில்லைகங்கா நகர், பழவந்தாங்கல் மூவரசம்பேட்டை ஆகிய பகுதிகளுக்கும் நங்கநல்லூருக்கும் இடையே நல்ல வித்தியாசம் உள்ளது. 1960களின் இறுதியில் இப்பகுதி விவசாய விளை நிலமாக இருந்துள்ளது. எழுபதுகளின் தொடக்கத்தில் பிளாட் போடப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. மைலாப்பூரில் வீடு வாங்க முடியாதவர்கள் சொல்லிவைத்து வாங்கியது போல் தங்களுக்கென்று கூட்டாக வாங்கி தங்களுக்கென்று தனியிடத்தை அமைத்துக் கொண்ட இடமாகத்தான் நங்கநல்லூர் இருக்கிறது. ரியல் எஸ்டேட் காரர்கள் இவர்களை கவரவேண்டும் என்ற காரணத்திற்காக கோவில்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்திருப்பதும் தெளிவாக தெரிகிறது. அருகாமையில் உள்ள தில்லைகங்கா நகருக்கு பெயர் சூட்டப்பட்டதும் இந்த நோக்கத்தில் தான்.
புராணகாலத்தில் பிரபலமாக இருந்து பழவந்தாங்கல் (பல்லவன்தாங்கல் என்றும் அழைக்கிறார்கள்) கிராமத்தின் அடையாளங்கள் மாறிவிட்டன. இந்த கிராமத்தில் 60களின் இறுதியில் 70களின் துவக்கத்தில் புறநகர் ரெயில் நிலையம் அமைக்கப்பட்டபோது அதற்கு நங்கநல்லூர் என்று பெயரிடவேண்டும் என்று நங்கநல்லூர் வாசிகள் தங்களுக்கு இருந்த செல்வாக்கையெல்லாம் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் பழவந்தாங்கல் வாசிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த போராட்டம் காரணமாக பழவந்தாங்கல் என்று அந்த ரெயில் நிலையத்திற்கு பெயர் சூட்டப்பட்டது. தங்கள் ஆதிக்கம் செல்லுபடியாகவில்லையே என்று கறுவிக்கொண்டிருந்தவர்களுக்கு மெட்ரோரெயில் வரப்பிரசாதமாக அமைந்தது. தங்கள் முழுபலத்தை இதில் காட்டி வெற்றி பெற்று இருப்பது தெளிவாகத் தெரிகிறது.
40 ஆண்டுகாலம் காத்திருந்து தங்கள் எண்ணத்தை இப்போது ஈடேற்றிக் கொண்டார்கள். இதற்கு பெரிதாக எதிர்ப்பு கிளம்பாததற்கு நம் ஊடகங்களும் அதில் உள்ளவர்களுக்கு எந்த ஆர்வமும் இல்லாமல் இருப்பதும்தான் காரணம் என்றும் சொல்லலாம்.

Thursday, March 12, 2015

என் முதல் ரேடியோ!

1989ல் நான் பி.ஏ. முடித்துவிட்டு அடுத்து என்ன செய்வது என்று யோசிக்காமல் என் தந்தையாரின் வியாபாரத்தை கவனித்துக் கொண்டு இருந்த நேரம். சினிமா பாடல்கள் தான் ஒரே பொழுது போக்கு. விவிதபாரதி, சென்னை அலைவரிசை ஒன்று, இலங்கை வானொலியின் தமிழ்ச்சேவை என எந்த நேரத்தில் எங்கு தமிழ்பாடல்கள் ஒலிபரப்பப்படும் என்று அப்போது விரல் நுனியில் தகவல் வைத்திருப்போம். அப்பா மிகவும் கண்டிப்பு. முன்பு ஒருமுறை ரேடியோ ஒன்றை தூக்கிப்போட்டு உடைத்திருந்தார். ஆகவே ரேடியோவில் பாட்டு கேட்பது என்பது அவர் இல்லாத போது தான். அப்போது பக்கத்துக் கடை எலக்டிரிக் பொருட்கள் விற்கும் கடை. கடைக்காரர் கைக்கு அடக்கமான பழைய பிலிப்ஸ் ரேடியோ வைத்திருப்பார். அவர் கடை திறந்ததும் அதில் பாட்டு வைப்பார். அவர் விரும்பும் போது பாடல் கேட்கும். மற்ற நேரம் நிறுத்தி விடுவார். வாரத்திற்கு 2 பேட்டரி ஆகிறது என்று சலித்துக் கொள்வார்.
எங்களுக்கு இருந்த ஒரே ஆறுதல் அது தான்.
அந்த காலகட்டத்தில் ஒரு நாள் என் வியாபார விஷயமாக ஒருவரை காணச் சென்ற போது அவர் நேஷனல் ரேடியோ ஒன்றை வைத்திருந்தார். கருப்பு நிறத்தில் கைக்கு அடக்கமாக மிகவும் அழகாக அந்த ரேடியோ இருந்தது. ரேடியோவில் இருந்து வந்த பாடல்களின் தெளிவு நண்பர் வைத்திருந்த பிலிப்ஸ் ரேடியோவை விட இனிமையாக தெளிவாக இருந்தது. கையிலே வாங்கி பார்த்தேன். பள பள என்று என் கையில் மின்னியது.


இதை எங்கே வாங்கினீர்கள் என்று அந்த நபரிடம் கேட்டேன். அதற்கு அவர், தம்பி நான் இதை பர்மா பஜாரில் வாங்கினேன். 150ரூபாய் என்றார் பெருமையாக.
எனக்கோ எப்படியும் இதைப் போன்று ஒரு ரேடியோவை வாங்கிவிட வேண்டும் என்ற வெறி ஏற்பட்டது. அப்பாவிடம் கேட்டால் நிச்சயமாக அனுமதி கிடைக்காது.
ஏச்சுத் தான் மிஞ்சும். ஆனால் இந்த ரேடியோ என் கண் முன்னாலேயே நின்றது.
எப்படியாவது அப்படி ஒரு ரேடியோவை வாங்கிவிட வேண்டும் என்று தீர்மானித்தேன். தீர்மானம் தீவிரமானது. ஒவ்வொரு நிமிடமும் ஆசை அதிகரித்துக் கொண்டே போனது.
வெறி கனவிலும்விடவில்லை. மறுநாள் என் கையில் அந்த ரேடியோ தவழ்வது போல கனவு கண்டேன். என்னால் அன்று உறங்கவே முடியவில்லை. அந்த ரேடியோவை எப்படி வாங்குவது என்ற எண்ணம் தான் மேலோங்கி இருந்தது.
மறுநாள் மாலையில் என் கையில் வியாபாரத்தின் போது என் கைவசம் இருந்த பணத்தை எல்லாம் திரட்டி (160ரூபாய் தேறியது) எடுத்துக் கொண்டு பர்மா பஜாருக்கு சைக்கிளில் சென்றேன். (அப்போது 160ரூபாய் என்றால் பெரிய விஷயம். அப்பா விளாசிவிடுவார் என்ற பயம் வேறு)
மந்தைவெளியில் இருந்து பாரிமுனைக்கு சைக்கிளில் பறக்கத்தான் செய்தேன். மனதில் இருந்த ஒரே வெறி, நான் பார்த்த அந்த ரேடியோ போன்று ஒரு ரேடியோவை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்பது தான். அன்றைக்கு இருந்த பர்மா பஜார் கடைகளில் பல கடைகளில் இந்த ரேடியோவை தொங்க விட்டு இருந்தார்கள். விசாரித்தால் 175ரூபாய் என்றார்கள். கையில் அவ்வளவு காசிருந்தால் பேசாமல் முதல் கடையிலேயே வாங்கியிருப்பேன். கையில் இருந்தது 160ரூபாய் தான். கைக்காவலுக்குக் கூட வேறு பணம் இல்லை. கடை கடையாக ஏறி இறங்கினால் வழியே இல்லை. நாம் கேட்டதும், நம்மை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துவிட்டு பின்னர் 175ரூபாய் என்பார்கள் 180ரூபாய் என்பார்கள். மாலை நேரம் இருட்டாகிக் கொண்டிருந்தது. அப்பா தேடத் தொடங்கிவிடுவார்கள். தம்பியிடம் லேசாக காதைக் கடித்துவிட்டு வந்திருந்ததால் அவன் அப்பாவை சமாளிப்பான் என்று மனதில் நம்பிக்கை இருந்தது.
கடைக்காரர்கள் சளைக்கவே இல்லை. சுமார் 200 கடைகளில் நான் 75 கடைகளை தாண்டியிருப்பேன். பின்னர் தான் யோசித்தேன். எடுத்தவுடன் ரேடியோவை கேட்பதால் அதற்கு விலை வைக்கிறார்கள், எனவே வேறு பொருளை முதலில் கேட்போம் என்ற உத்தி மனதில் தோன்றியது.

அதே போல் ஒரு கடையில் போய், அங்கிருந்த ஒரு கால்குலேட்டரை விலை கேட்டேன். உடனே அந்த கடைக்காரர் என்னை ஏற இறங்க பார்த்து விட்டு யானை விலை சொன்னார். நான் உடனே அடேயப்பா, நிறைய விலை சொல்கிறீர்களே என்றேன். உடனே அவர், தம்பி, கால்குலேட்டர் இப்போது கடும் கிராக்கி, அதிகம் கொண்டு வரமுடியவில்லை அதான் இந்த விலை. இந்தா இந்த ரேடியோ 150ரூவா தான் என்றார். நான் எதிர்பார்த்து சென்ற அதே ரேடியோ, ஆனால் சிகப்பு நிறம். கருப்பு ரேடியோவை விட மிகவும் அழகாக இருந்தது.
நான் வேண்டா வெறுப்பாக அந்த ரேடியோவை பார்ப்பது போல் பார்த்துவிட்டு, 150ரூபாய்க்கு அப்படி என்ன இருக்கிறது, டெல்லி செட் 40-50க்கு கிடைக்கிறதே என்றேன். தம்பி இது இந்தோனேசியாவில் இருந்து வருகிறது என்றார். நான் என் மனதில் ஏற்பட்ட குதூகலத்தை வெளியில் காட்டாமல் அவரிடம், சரி வந்ததற்கு இதையாது வாங்கிக் கொள்கிறேன் என்று கூறி, 150ரூபாயை கொடுத்துவிட்டு அந்த ரேடியோவை வாங்கி சட்டைப் பைக்குள் திணித்துக் கொண்டு சைக்கிள் நிறுத்திய இடத்திற்கு விரைந்தேன்.
மனதில் ஏகப்பட்ட மகிழ்ச்சி. என் துள்ளல் நடை தான் என் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கும். முகத்தை கட்டுப்படுத்திக்கொண்டு என் கடைக்குத் திரும்பினேன். மீதமிருந்த 10 ரூபாய்க்கு 2 செல் வாங்கிக் கொண்டு கடைக்குச் சென்றேன். தம்பி எனக்காக ஆவலுடன் காத்திருந்தான். நேரம் இரவு 9 மணி ஆகியிருந்தது. ரேடியோவை அப்பாவிற்குத் தெரியாமல் கடைக்கு பின் இருந்த வீட்டுக்கு கொண்டு சென்று, அங்கு கழுகுக் கண்களையும், போலீஸ் மோப்பநாயின் கூர்மையான மோப்ப சக்தியையும் கொண்டிருந்த மற்ற உடன்பிறப்புகளின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு மொட்டை மாடிக்கு கொண்டு சென்று ரேடியோவை ஒளித்து வைத்துவிட்டு கீழே வந்தோம்.
இரவு உணவு முடிந்ததும் வழக்கமாக படுக்கப் போவது போல் சென்று மொட்டை மாடியில் வைத்து ரேடியோவை ஆன் செய்து பாட்டு கேட்ட போது கிடைத்த அந்த இன்பம், மகிழ்ச்சி ஆனந்தம், அதை விவரிக்க வார்த்தை கிடையாது.
மறுநாள் காலை, பக்கத்துக் கடைக்காரர் வருவதற்கு முன்னரே எங்களிடம் இந்த ரேடியோவில் இருந்து பாடல் தாலாட்டிக் கொண்டிருந்தது.
சென்னை அலைவரிசை ஒன்று, விவிதபாரதி மட்டுமின்றி, இலங்கை வானொலியையும் துல்லியமாக கேட்க வைத்தது அந்த ரேடியோ.
சுமார் 4 வருடங்களுக்கும் மேல் அந்த ரேடியோ எங்களுக்கு பாடல்களை வழங்கியது. அதன்பின்னர் எப்.எம். ரேடியோ வரத்தொடங்கியது. நாங்கள் டேப் ரெக்கார்டர் அசெம்பிள் செய்து ஆம்பிளிபையருடன் பாடல்களை கேட்கத் தொடங்கினோம். அப்போது மற்றவர்கள் கைப்பட்ட அந்த ரேடியோ உடைந்தது.
பின்னர் கண்ணில் காணாமல் போனது. அதன் பின் எத்தனையோ ரேடியோக்கள் வாங்கினாலும், அந்த சிகப்பு நிற நேஷனல் ரேடியோ கொடுத்த சந்தோசம் வேறு எதிலும் கிடைத்ததில்லை.
ரேடியோ ஒன்று புதிதாக நம்மிடம் இருக்கிறதே என்று என் அப்பா ஒரு நாள் கூட கேட்கவில்லை. அது இன்னொரு வியப்பு.

Sunday, September 29, 2013

ராஜா ரகு ராம் ரவி

 எண்பதுகளின் தொடக்கத்தில், அனேகமாக 1980ல் ராஜா அண்ணாமலைபுரத்தில் ஆர். கே. மடம் சாலையில் உள்ள எங்கள் வீட்டுக்கு அருகில் குடிவந்தார்கள் ராஜா, ரகு, ராம், ரவி சகோதரர்கள். மூத்தவன் ராஜா என்னை விட ஓரிரு வயது சின்னவன். மற்றவர்கள் அடுத்தடுத்து இருந்தார்கள். அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்று தெரியவில்லை. கேட்க வேண்டும் என்று அந்த வயதில் தோன்றவில்ல. பெங்களூரில் அவர்களுக்கு உறவினர்கள் இருக்கிறார்கள் என்று பின்னர் தெரியவந்தது.

இந்த நான்கு சகோதரர்களும் பெசன்ட் நகரில் உள்ள ஆல்காட் பள்ளியில் படித்தார்கள். நான்கு பேரும் ஜிப்பா அணிந்து (அந்த பள்ளியின் சீருடை அது தான்) அவர்கள் செல்வதைக்காண ஜோராக இருக்கும்.
 அப்பா வங்கி ஒன்றில் அன்றாடம் வீடு வீடாக சென்று சிறுசேமிப்பு வசூல் செய்யும் பிரிவில் பணிபுரிந்தார். அம்மா படித்தவர், இல்லத்தரசியாக இருந்தார். வீட்டு ஓனர் குழந்தைகளுக்கும் மற்ற குழந்தைகளுக்கும் டியூஷன் எடுத்தார்.

அவர்கள் வீட்டில் எல்லாம் கண்டிப்புதான். காலையில் 5.30 மணிக்கு அனைவரும் எழுந்திருக்க வேண்டும். 7 மணி வரை படிக்க வேண்டும். 7 மணிக்கு காபியோ அல்லது டீ யோ கிடைக்கும். 8 மணிக்கு டிபன். உடன் பள்ளிக்கு புறப்பட்டு செல்ல வேண்டும். விடுமுறை நாட்களிலும் இது கண்டிப்புடன் கடைபிடிக்கப்படும்.  குறித்த நேரத்தில் டிபன் சாப்பிடாவிட்டால் பின்னர் கிடைக்காது. மாலையில் 2 மணி நேரம் விளையாட்டு, பின்னர் படிப்பு. பின்னர் இரவு 8 மணிக்கு இரவு உணவு. அதன் பின் படிப்பு. பின் தூக்கம். இப்படி குடும்பம் அழகாக சென்று கொண்டிருந்தது. அவன் அப்பா ஆபீஸ் செல்ல பி.எஸ்.ஏ. எஸ்.எல்.ஆர். சைக்கிள் வைத்திருந்தார். மிகவும் சிக்கமான குடும்பம். தண்டமாக எந்த செலவும் செய்ய மாட்டார்கள். சிறுக சிறுக பணம் சேர்த்தனர். அந்த நாளில் 4 குழந்தைகளை பள்ளியில் படிக்க வைப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. இதற்கிடையில் அவர் லூனா மொபட் வாங்கியிருந்தார். பசங்க சைக்கிளை ஓட்டி மகிழ்வார்கள்.

எந்த விளையாட்டாக இருந்தாலும் அவர்கள் விளையாடுவார்கள். அவர்கள் தான்  ஆதிக்கம் செலுத்துவார்கள். சிறு சிறு விளையாட்டுக்களில் அண்ணன் தம்பி 3 பேரும் சிறந்து விளையாடுவார்கள். நான்காவது தம்பி ரவி சிறியவன் என்பதால் அவன் மற்றவர்களை கண்காணிக்கும் பணியை செய்தான். தாயாரிடம் கொண்டு செல்லப்படும் புகார்களுக்கு கடுமையான தண்டனை உண்டு.  மழை அல்லது கடும் வெயில் காரணமாக விளையாட வெளியே போக முடியாத நேரத்தில் வீட்டில் விளையாட இன்டோர் கேம்ஸ் ஏராளம் வைத்திருந்தார்கள். டிரேட், உள்ளிட்ட பல விளையாட்டுக்களை நான் அவர்களிடம் தான் முதன் முதலில் பார்த்தேன். ஒண்டு குடித்தனமாக இருந்தாலும், அவர்கள் வீட்டுக்கு எங்களுக்கு பகல் நேரத்தில் மட்டும் அனுமதி உண்டு. நாங்கள் போய் டிரேட் போன்ற விளையாட்டுக்களை விளையாடுவோம். சிகரெட் அட்டைகளை சேகரித்து அதில் எங்களுக்கு டிரேட் அட்டைகளை தயாரித்து விற்பான்.

அவர்கள் படித்த விதம், பழகிய விதம் போன்றவை எங்கள் வீட்டருகில் இருந்த அனைத்து வீடுகளிலும் உதாரணத்திற்கு பயன்படுத்தப்பட்டு வந்தன. அப்பாவு கிராமணி 2வது மற்றும் 3வது தெருவில் உள்ள அனைவருக்கும் அவர்களைத் தெரிந்திருக்கும். அந்த வயதில் குழந்தைகள் உள்ள வீட்டில் தினமும், ராஜா வீட்டைப்பார், அந்த அண்ணன் தம்பிகளைப்பார் என்று சொல்லியிருப்பார்கள். அந்த நாளில் என் தந்தையார் கூட அந்த பசங்களைக் காட்டி என்னை அடித்துள்ளார்.

2 வருடங்கள் தாண்டின. ஒரு நாள் மூத்தவன் ஒரு பிளாஸ்டிக் கூடை நிறைய பொருட்களை கொண்டு சென்று கொண்டிருந்தான். அப்போது நாங்கள் பழைய பேப்பர் கடை வைத்திருந்தோம். எங்கள் கடைக்கு கொண்டு செல்லாமல் மறைத்து மறைத்து கொண்டு செல்கிறானே என்று அவனை பின் தொடர்ந்த சென்று வழிமறித்து கேட்டேன். கூடையில் என்ன இருக்கிறது என்று பார்த்தேன். அதில் குவார்ட்டர் பாட்டில்கள் நிறைய இருந்தன. என்னடா என்று கேட்டேன். அப்பா, ஆபீசில் பார்ட்டியில் இருந்து இங்கே கொண்டு வருவார். மொத்தமாக போட்டால் செலவுக்கு நல்லது தானே என்று நாங்கள் சேர்த்து போடுகிறோம் என்றான். அவன் அப்பா மீது எனக்கு மதிப்பும் மரியாதையும் கூடியது. இப்படி சிறுக சிறுக மிச்சம் பிடிக்கிறாரே என்று நினைத்ததுண்டு.  ஓரிரு மாதத்தில் ராஜாவின் தந்தையிடமிருந்து லூனா காணாமல் போயிருந்தது.  சைக்கிளும் அடுத்த மாதம் காணாமல் போனது.
ஒரு நாள் ராஜா என்னிடம் வந்து, சிதம்பரம், என்னிடம் இருக்கும் தாயக்கட்டை, செஸ், டிரேட் போன்றதை விற்க விரும்புகிறேன் வாங்கிக் கொள்கிறாயா என்று கேட்டான்.

நான் என் அப்பாவிடம் கேட்டேன். அப்பா சொன்னார், “தம்பி,  அவங்க வீட்டில் பிரச்சினை, அவன் அப்பா குடித்துவிட்டு ஆபீஸ் பணத்தையும் கையாடல் செய்துவிட்டதால் வேலை போய்விட்டது. கடந்த ஒரு வாரமாக அவன் அப்பாவைக் காணவில்லை. ராஜாவின் தாய் மாமன் வந்து வீட்டைக்காலி செய்து பொருட்களை கொண்டு செல்ல வந்திருக்கிறான். ராஜாவின் அம்மாவும் கடைசி பையனும் அவர்கள் மாமா வீட்டிற்கு போகிறார்கள். மற்ற 3 பேரையும் வேலைக்கு அனுப்பப் போகிறார்கள். இந்த கஷ்டத்தில் அவர்கள் விற்கும் இந்த பொருட்கள் நமக்கு வேண்டாம்.”

 எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

அப்பா சொன்னபடி தான் நடந்தது.

ராஜா சினிமாகாரர்களுக்கு ஓடும் மெட்டடோர் வேனின் கிளீனராக வேலைக்க சேர்ந்தான். ரகு யார் வீட்டிலோ எடுபிடியாக வேலைக்கு சேர்ந்தான். ராம் இன்னொருவர் வீட்டில் வேலைக்கு சேர்ந்தான். ராமிற்கு அப்போது 8 வயது இருக்கும். ராஜா மட்டும் ஓரிரு வருடங்கள் வந்து தலைகாட்டிச் சென்றான்.

அதன் பின் அவனைக்காணவில்லை. என்னுடைய 12 வயதில் இந்த சம்பவம் நடந்தது. என் கண்முன்னால் குடியால் அழிந்த குடும்பம் ராஜா,ரகு ராம் ரவியின் குடும்பம். பல முறை அவர்களை நினைத்துப்பார்பதுண்டு. நினைக்கும் போதெல்லாம் மனம் வலிக்கும்.

அந்த பிஞ்சு உள்ளங்களின் எதிர்காலத்தை சுட்டுப்பொசுக்கிய, ஓர் அற்புதமான குடியை கெடுத்த அந்த குடி சின்ன வயதிலேயே என் மனதில் அரக்கனாக பதிந்தது.

Friday, August 16, 2013

கேடிகளும் கேப்மாரிகளும் கல்விப்பணியாற்றினால்?

தில்லியில்  உள்ள நண்பர் ஒருவர் தன்னுடைய எம்.பி.ஏ. பட்டப்படிப்பிற்காக சென்னை பல்கலைக்கழக அஞ்சல் வழி பாட திட்டத்தில் சேர்ந்தார். தேர்வு மையம் சென்னை என்று தேர்வு செய்தார். சென்னைப் பல்கலைக்கழக அறிவாளிகள் தாம்பரத்தில் இருந்து 10 கிலோமீட்டர் உள்ளே தனிக்காட்டில் இயங்கிய தனியார் பொறியியல் கல்லூரியை தேர்வு செய்து அங்கு தேர்வினை நடத்தினார்கள். நண்பரும் ஒரு நாள் முன்னதாக சென்னை வந்தார். தேர்வு நுழைவுச்சீட்டு தேர்வு வளாகத்தில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. நண்பர் ஓட்டல் ஒன்றில் தங்கிவிட்டு வாடகைக்கு கார் ஒன்றை அமர்த்தி கல்லூரிக்கு சென்றார். அலுவலகத்தில் பேன்ட் ஷர்ட் அணிந்து செல்லும் வழக்கம் கொண்ட அவர், விடுப்பில் தானே வந்தோம் என்று ஜீன்ஸ் பேன்ட் அணிந்து சென்றிருக்கிறார்.
கல்லூரியில் உள்ள குண்டர்கள் (அப்படிப்பட்டவர்களைத்தானே இப்போது என்ஜினியரிங் கல்லூரிகளில் வேலைக்கு வைக்கிறார்கள்) முதலில் நண்பரின் செல்போனை வாங்கி வைத்துக்கொண்டு டோக்கன் கொடுத்திருக்கிறார்கள். பின்னர் நண்பரைப் பார்த்து நீங்கள் ஜீன்ஸ் பேன்ட் அணிந்து தேர்வு எழுத அனுமதிக்க மாட்டோம் என்று சொல்லியிருக்கிறார்கள். நண்பரும், இது பற்றி எனக்கு முன்னரே சொல்லியிருந்தால் நான் அணிந்து வந்திருக்க மாட்டேனே என்று சொல்லியிருக்கிறார். அதற்கு அவர்கள், இது கல்லூரி விதிமுறை, இது பற்றி தேர்வு நுழைவுச் சீட்டில் குறிப்பிட்டு இருக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். (அந்த நுழைவுச்சீட்டை கல்லூரிக்கு வந்தபின்னர் தான் பெறமுடியும் என்பதை அந்த குண்டர்கள் ஏன் அறிந்திருக்கவில்லை என்று தெரியவில்லை).
நண்பர் மட்டுமின்றி, வெளியூரில் இருந்து வந்த பலர் அங்கு தேர்வுக்கு ஜீன்ஸ் அணிந்து வந்துள்ளனர். உடனே அந்த குண்டர்கள், கல்லூரியின் விடுதியில் உள்ள மாணவர்கள் அறைகளுக்கு சென்று மாணவர்களின் பேன்ட்டுகளை எடுத்து நண்பரை அணிய செய்திருக்கிறார்கள். அடுத்தவரின் உடையை அணிந்து ஒருவித அருவெறுப்புடன் நண்பர் தேர்வினை எழுதி வந்துள்ளார்.
மாணவர்கள் உடையின் அளவு பொருந்தாத மற்ற தேர்வு நாடுநர் நிலைமையை சொல்லி மாளாது.
நடுக்காட்டில் உள்ள அந்த கல்லூரியில் உணவுக்கும் வசதியில்லையாம். இப்படி கல்லூரியாக தேர்வு செய்து அங்கு தேர்வினை எழுதவைத்த சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஊழியர்களின் புத்திசாலித்தனத்தையும், ஜீன்ஸ் பேன்ட் அணிந்து தேர்வு எழுத அனுமதிக்காத கல்லூரி குண்டர்களையும், மாணவர்களின் உடைகளை விடுதியில் இருந்து எடுத்து அணிந்து கொள்ள அனுமதித்த அவர்கள் தாராளத்தையும் எண்ணி மத்திய அரசு பணியில் இயக்குநர் அந்தஸ்த்தில் உள்ள அந்த நண்பர் நொந்து போய் புலம்பித் தள்ளிக்கொண்டு இருந்தார்.

Tuesday, July 16, 2013

அடிமை விலங்குகள்!

சென்னையில் அங்காடித் தெருவில் உள்ள அந்த பிரபலமான கடைக்கு போகாதவர்களே இருக்க முடியாது. நாளுக்கு நாள் அங்கே கூட்டம் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. அங்கே கிடைக்காத பொருள் இல்லை. அதை வாங்கிக்குவிக்காத தமிழனும் இல்லை.  நானும் இதற்கு எந்த விதத்திலும் விதிவிலக்கல்ல.

எப்போது சென்னை வந்தாலும் அங்கே சென்று பொருட்கள் வாங்கி தில்லிக்கு கொண்டுவருவது வழக்கம். தில்லியை விட முன்பு பொருட்கள் மலிவாக இருக்கும். இது முன்பு. இப்போது அப்படி இல்லை.

முன்பு 10 சதவீத லாபம் மட்டுமே வைத்தார்கள். ரூ50க்கு பொருளை வழங்கும் விற்பனையாளர் ரூ55க்கு ஸ்டிக்கர் ஒட்டி, கடையில் அடுக்கிவிட்டு செல்ல வேண்டும். அந்த அளவு 10 சதவீத லாபம் என்பது முன்பிருந்தது. இப்போத 35 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை லாபம் வைக்கிறார்கள். தில்லியில் உள்ள பொருட்களின் விலையை ஒப்பிட்டே நான் இதை ஆணித்தரமாக சொல்ல முடியும்.

இந்த விலையிலும் அவர்கள் மற்றவர்களை விட மலிவாக வழங்கமுடிகிறது என்றால், மற்றவர்கள் அடிக்கும் கொள்ளையை என்ன சொல்ல?

நான் இங்கே சொல்ல வந்த விஷயம் அது அல்ல.

சில ஆண்டுகளுக்கு முன்னால் அந்த கடையில் வழக்கமாக கடை ஊழியர்கள் அணியும் சீருடையுடன் வேறு நிற வண்ணத்தில் சீருடை அணிந்தவர்களைக் கண்டேன். என்னவென்று விசாரித்த போது, எடுபிடி வேலைக்காக மேற்கு வங்கம், ஒடிசா போன்ற பகுதியில் இருந்து ஆட்களை அமர்த்தியிருப்பதாக சொன்னார்கள்.

பின்னர் கடந்த வருடம் ஜட்டி பனியன் விற்பனையிலும் வட இந்திய இளைஞர்களைக்கண்டேன். அவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. பொருட்களை எடுத்துக்காட்டுவதிலும் ஆர்வம் காட்டவில்லை. வாங்கி வந்த பொருட்களை வீட்டில் வந்து பார்த்தால் வேறு அளவுடனாக இருந்தது.
இந்த முறை நானும் என் மனைவியும் வீட்டுப்பொருட்களை அங்கே அள்ளினோம். இரவு 9.45 மணி ஆகிவிட்டது. கடை அடைப்பதற்கான அறிகுறிகள் தோன்றின.

அந்த தெருவிற்குள் இரவு 9.30 மணிக்கு மேல் தான் பொருட்கள் ஏற்றிவரும் டெம்போக்கள் வர அனுமதி உண்டு. வெளியே பார்த்தேன். வண்டிகள் வரிசையாக நின்றன. வாடிக்கையாளர்களை மெல்ல அனுப்பிக்கொண்டிருந்தார்கள்.


எனக்கு நிறைய பொருட்கள் என்பதால் அதனை தேடிப்பிடித்து சரிபார்த்து த் தர நேரம் பிடித்தது. காத்திருந்த நேரத்தில் தான் அந்த காட்சியைக் காண நேர்ந்தது.

கடை வாசலில் காத்திருந்த வண்டிகளில் முதல் இரண்டு வண்டிகளில் இருந்து சாமான்களை எடுக்க முனைப்பான முயற்சி நடைபெற்றது. அப்போது எங்கிருந்து தான் வந்தார்களோ (வந்ததோ என்று அழைப்பதே பொருத்தமானதாக இருக்கும்). ஆட்டு மந்தை போல் ஒருவர் பின் ஒருவராக, அந்த வித்தியாசமான, நான் முன்பே சொன்ன அந்த வித்தியாசமான வண்ணம் கொண்ட சீருடையணிந்தவர்கள் வந்தார்கள்.

ஒருவர் மற்றவரிடம் பேசவில்லை. தன் தாய்மொழியில் கூட பேசவில்லை. முகத்தில் எவ்வித சலனமும் இன்றி, டெம்போவில் இருந்து இறக்கி விடப்பட்ட கனமான பாத்திர மூட்டைகளை முதுகில் தாங்கி வந்து கடையின் முன் பகுதியில் இறக்கினார்கள். பின் அதே வரிசையில் சென்று மீண்டும் வண்டிக்கு அருகில் சென்று அங்கும் வரிசையில் நின்று சாமான்களை முதுகில் சுமந்து வந்தார்கள்.

சில நிமிடங்களில் இரண்டு வண்டி சாமான்கள் இறக்கப்பட்டதும், அவை புறப்பட்டன, அடுத்த இரண்டு வண்டிகள் வந்தன. முதல் இரண்டு வண்டியில் வந்த சாமான்களின் சொந்தக்காரர்கள், கடை ஊழியர்களுடன் சேர்ந்து அவற்றை எடை போட்டு சரிபார்த்தனர்.

அதற்குள் இந்த சுமைதூக்கிகள் அடுத்த வண்டியில் இருந்து சாமான்களை  இறக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒருவன் சுமையை தவறவிட்டான், காலில் போட்டுக்கொண்டான். அதற்கு அவனிடம் இருந்து எந்த சத்தமும் வரவில்லை. மற்ற ஊழியர்கள் தான் அவனை காட்டுத்தனமாக ஏசினார்கள். காட்டுத்தனமாக என்றால், தமிழ் மற்றும் அவர்களுக்கு தெரிந்த இந்தியில் ஏசினார்கள். அதற்கு சாமானை தவறவிட்டவனிடம் இருந்து எவ்வித பதிலும் இல்லை. அவன் பின்னால் இருந்தவர்களிடம் இருந்தும் மூச்சு பேச்சில்லை.

அந்த வலியிலும் அவன் கூன்விழுந்தவன் போல் சுமையை முதுகில் சுமந்து கொண்டு வந்து இறக்கினான். சுமார் 15 நிமிடங்கள் இந்த காட்சியை பார்த்ததும் எனக்கு இவர்கள் எப்படி பேசாமல் இருக்கிறார்கள் என்ற சந்தேகம் வந்தது. சற்று ஆராய்ந்து பார்த்தால், அவர்கள் வங்காளதேசத்தில் இருந்து பிழைக்க வந்தவர்களாக இருக்கவேண்டும் என்று எண்ணத் தொடங்கினேன். அதற்கு வாய்ப்பிருக்கிறது. அதிகம் வாய் திறக்காமல் எந்த வட இந்தியனாலும் இருக்க முடியாது. இப்படி, வாய் மூடி மவுனியாக, கூனிக்குறுகி, அடிமையைப் போல் இங்கே வந்து வேலை செய்கிறார்கள் என்றால் அவர்கள் வங்காள தேசத்தை சேர்ந்தவர்களாகத்தான் இருக்கும். வங்காள தேசத்தில் இருந்து சட்ட விரோதமாக குடியேறுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மும்பை கொல்கத்தா போன்ற இடத்தில் அவர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள். இப்போது அவர்கள் தமிழ்நாட்டிற்கும் வந்துவிட்டார்கள்.

சொன்னவேலையை, ரோபோ போன்று, எவ்வித எதிர்ப்பும் காட்டாமல், அடிமையாக அடிமையிலும் அடிமையாக செய்துவருகிறார்கள். 15 வயது முதல் 60 வயது வரையிலானவர்களை பார்க்கலாம்.


கடைக்காரர் அவர்களுக்கு சம்பளம் கொடுக்கிறார், ஒரு வேளை அவர்கள் வயிறார சாப்பிடுகிறார்களாக இருக்கும். ஆனால் அவர்கள் இந்த வேலையை செய்யாவிட்டால், அந்த வேலையை செய்ய தமிழர்கள் கிடைப்பதில்லை.

இங்கே தமிழர்களுக்குத்தான் இலவச அரிசி, அம்மா உணவகம் இருக்கிறதே?. அவர்கள் ஏன் இது போன்ற வேலைக்கு வருகிறார்கள்?.

இன்று சென்னையின் எந்த மூலையைப்பார்த்தாலும், எந்த கடையைப்பார்த்தாலும் வட இந்தியர்கள் தான் இருக்கிறார்கள். அவர்கள் உண்மையில் வட இந்தியர்கள் தானா இல்லை வங்காள தேசத்தை சேர்ந்தவர்களா தெரியவில்லை. அவர்கள் இல்லாமல் வீடு கட்ட முடியாது, டெம்போ போன்ற வண்டி ஓட்ட முடியாது. ஒவ்வொரு சலூனிலும் அவர்களைக் காணலாம்.

ஓசி சோறு சாப்பிட்டு நாம் சோம்பேறியாகிக்கொண்டிருக்கிறோம். ஒரு நாள் நாம் இவர்களைப்போல் அடிமைகளாக எங்காவது போய் வேலை செய்ய வேண்டிய நேரம் வரலாம்.