Sunday, September 29, 2013

ராஜா ரகு ராம் ரவி

 எண்பதுகளின் தொடக்கத்தில், அனேகமாக 1980ல் ராஜா அண்ணாமலைபுரத்தில் ஆர். கே. மடம் சாலையில் உள்ள எங்கள் வீட்டுக்கு அருகில் குடிவந்தார்கள் ராஜா, ரகு, ராம், ரவி சகோதரர்கள். மூத்தவன் ராஜா என்னை விட ஓரிரு வயது சின்னவன். மற்றவர்கள் அடுத்தடுத்து இருந்தார்கள். அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்று தெரியவில்லை. கேட்க வேண்டும் என்று அந்த வயதில் தோன்றவில்ல. பெங்களூரில் அவர்களுக்கு உறவினர்கள் இருக்கிறார்கள் என்று பின்னர் தெரியவந்தது.

இந்த நான்கு சகோதரர்களும் பெசன்ட் நகரில் உள்ள ஆல்காட் பள்ளியில் படித்தார்கள். நான்கு பேரும் ஜிப்பா அணிந்து (அந்த பள்ளியின் சீருடை அது தான்) அவர்கள் செல்வதைக்காண ஜோராக இருக்கும்.
 அப்பா வங்கி ஒன்றில் அன்றாடம் வீடு வீடாக சென்று சிறுசேமிப்பு வசூல் செய்யும் பிரிவில் பணிபுரிந்தார். அம்மா படித்தவர், இல்லத்தரசியாக இருந்தார். வீட்டு ஓனர் குழந்தைகளுக்கும் மற்ற குழந்தைகளுக்கும் டியூஷன் எடுத்தார்.

அவர்கள் வீட்டில் எல்லாம் கண்டிப்புதான். காலையில் 5.30 மணிக்கு அனைவரும் எழுந்திருக்க வேண்டும். 7 மணி வரை படிக்க வேண்டும். 7 மணிக்கு காபியோ அல்லது டீ யோ கிடைக்கும். 8 மணிக்கு டிபன். உடன் பள்ளிக்கு புறப்பட்டு செல்ல வேண்டும். விடுமுறை நாட்களிலும் இது கண்டிப்புடன் கடைபிடிக்கப்படும்.  குறித்த நேரத்தில் டிபன் சாப்பிடாவிட்டால் பின்னர் கிடைக்காது. மாலையில் 2 மணி நேரம் விளையாட்டு, பின்னர் படிப்பு. பின்னர் இரவு 8 மணிக்கு இரவு உணவு. அதன் பின் படிப்பு. பின் தூக்கம். இப்படி குடும்பம் அழகாக சென்று கொண்டிருந்தது. அவன் அப்பா ஆபீஸ் செல்ல பி.எஸ்.ஏ. எஸ்.எல்.ஆர். சைக்கிள் வைத்திருந்தார். மிகவும் சிக்கமான குடும்பம். தண்டமாக எந்த செலவும் செய்ய மாட்டார்கள். சிறுக சிறுக பணம் சேர்த்தனர். அந்த நாளில் 4 குழந்தைகளை பள்ளியில் படிக்க வைப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. இதற்கிடையில் அவர் லூனா மொபட் வாங்கியிருந்தார். பசங்க சைக்கிளை ஓட்டி மகிழ்வார்கள்.

எந்த விளையாட்டாக இருந்தாலும் அவர்கள் விளையாடுவார்கள். அவர்கள் தான்  ஆதிக்கம் செலுத்துவார்கள். சிறு சிறு விளையாட்டுக்களில் அண்ணன் தம்பி 3 பேரும் சிறந்து விளையாடுவார்கள். நான்காவது தம்பி ரவி சிறியவன் என்பதால் அவன் மற்றவர்களை கண்காணிக்கும் பணியை செய்தான். தாயாரிடம் கொண்டு செல்லப்படும் புகார்களுக்கு கடுமையான தண்டனை உண்டு.  மழை அல்லது கடும் வெயில் காரணமாக விளையாட வெளியே போக முடியாத நேரத்தில் வீட்டில் விளையாட இன்டோர் கேம்ஸ் ஏராளம் வைத்திருந்தார்கள். டிரேட், உள்ளிட்ட பல விளையாட்டுக்களை நான் அவர்களிடம் தான் முதன் முதலில் பார்த்தேன். ஒண்டு குடித்தனமாக இருந்தாலும், அவர்கள் வீட்டுக்கு எங்களுக்கு பகல் நேரத்தில் மட்டும் அனுமதி உண்டு. நாங்கள் போய் டிரேட் போன்ற விளையாட்டுக்களை விளையாடுவோம். சிகரெட் அட்டைகளை சேகரித்து அதில் எங்களுக்கு டிரேட் அட்டைகளை தயாரித்து விற்பான்.

அவர்கள் படித்த விதம், பழகிய விதம் போன்றவை எங்கள் வீட்டருகில் இருந்த அனைத்து வீடுகளிலும் உதாரணத்திற்கு பயன்படுத்தப்பட்டு வந்தன. அப்பாவு கிராமணி 2வது மற்றும் 3வது தெருவில் உள்ள அனைவருக்கும் அவர்களைத் தெரிந்திருக்கும். அந்த வயதில் குழந்தைகள் உள்ள வீட்டில் தினமும், ராஜா வீட்டைப்பார், அந்த அண்ணன் தம்பிகளைப்பார் என்று சொல்லியிருப்பார்கள். அந்த நாளில் என் தந்தையார் கூட அந்த பசங்களைக் காட்டி என்னை அடித்துள்ளார்.

2 வருடங்கள் தாண்டின. ஒரு நாள் மூத்தவன் ஒரு பிளாஸ்டிக் கூடை நிறைய பொருட்களை கொண்டு சென்று கொண்டிருந்தான். அப்போது நாங்கள் பழைய பேப்பர் கடை வைத்திருந்தோம். எங்கள் கடைக்கு கொண்டு செல்லாமல் மறைத்து மறைத்து கொண்டு செல்கிறானே என்று அவனை பின் தொடர்ந்த சென்று வழிமறித்து கேட்டேன். கூடையில் என்ன இருக்கிறது என்று பார்த்தேன். அதில் குவார்ட்டர் பாட்டில்கள் நிறைய இருந்தன. என்னடா என்று கேட்டேன். அப்பா, ஆபீசில் பார்ட்டியில் இருந்து இங்கே கொண்டு வருவார். மொத்தமாக போட்டால் செலவுக்கு நல்லது தானே என்று நாங்கள் சேர்த்து போடுகிறோம் என்றான். அவன் அப்பா மீது எனக்கு மதிப்பும் மரியாதையும் கூடியது. இப்படி சிறுக சிறுக மிச்சம் பிடிக்கிறாரே என்று நினைத்ததுண்டு.  ஓரிரு மாதத்தில் ராஜாவின் தந்தையிடமிருந்து லூனா காணாமல் போயிருந்தது.  சைக்கிளும் அடுத்த மாதம் காணாமல் போனது.
ஒரு நாள் ராஜா என்னிடம் வந்து, சிதம்பரம், என்னிடம் இருக்கும் தாயக்கட்டை, செஸ், டிரேட் போன்றதை விற்க விரும்புகிறேன் வாங்கிக் கொள்கிறாயா என்று கேட்டான்.

நான் என் அப்பாவிடம் கேட்டேன். அப்பா சொன்னார், “தம்பி,  அவங்க வீட்டில் பிரச்சினை, அவன் அப்பா குடித்துவிட்டு ஆபீஸ் பணத்தையும் கையாடல் செய்துவிட்டதால் வேலை போய்விட்டது. கடந்த ஒரு வாரமாக அவன் அப்பாவைக் காணவில்லை. ராஜாவின் தாய் மாமன் வந்து வீட்டைக்காலி செய்து பொருட்களை கொண்டு செல்ல வந்திருக்கிறான். ராஜாவின் அம்மாவும் கடைசி பையனும் அவர்கள் மாமா வீட்டிற்கு போகிறார்கள். மற்ற 3 பேரையும் வேலைக்கு அனுப்பப் போகிறார்கள். இந்த கஷ்டத்தில் அவர்கள் விற்கும் இந்த பொருட்கள் நமக்கு வேண்டாம்.”

 எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

அப்பா சொன்னபடி தான் நடந்தது.

ராஜா சினிமாகாரர்களுக்கு ஓடும் மெட்டடோர் வேனின் கிளீனராக வேலைக்க சேர்ந்தான். ரகு யார் வீட்டிலோ எடுபிடியாக வேலைக்கு சேர்ந்தான். ராம் இன்னொருவர் வீட்டில் வேலைக்கு சேர்ந்தான். ராமிற்கு அப்போது 8 வயது இருக்கும். ராஜா மட்டும் ஓரிரு வருடங்கள் வந்து தலைகாட்டிச் சென்றான்.

அதன் பின் அவனைக்காணவில்லை. என்னுடைய 12 வயதில் இந்த சம்பவம் நடந்தது. என் கண்முன்னால் குடியால் அழிந்த குடும்பம் ராஜா,ரகு ராம் ரவியின் குடும்பம். பல முறை அவர்களை நினைத்துப்பார்பதுண்டு. நினைக்கும் போதெல்லாம் மனம் வலிக்கும்.

அந்த பிஞ்சு உள்ளங்களின் எதிர்காலத்தை சுட்டுப்பொசுக்கிய, ஓர் அற்புதமான குடியை கெடுத்த அந்த குடி சின்ன வயதிலேயே என் மனதில் அரக்கனாக பதிந்தது.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

விளையாட்டாக ஆரம்பிக்கும் பழக்கம், வழக்கமாகி விபரீதமாகி விடுகிறது... இன்றைக்கு இது போல் நிறைய... என்று தீருமோ...?

Post a Comment