Saturday, October 8, 2016

நங்கநல்லூர் ரோடும் 40 வருடமும்

சமீபத்தில் சென்னை விமான நிலையம்- சின்னமலை இடையே மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த சேவை தொடங்கப்பட்ட போது என்னை வியப்பிற்குள்ளாக்கிய ஒன்று, இந்த இரண்டு ரெயில் நிலையங்களிடையே அமைந்துள்ள நங்கநல்லூர் ரோடு என்ற ரெயில் நிலையம் தான்.திண்டுக்கல்லுக்கு அடுத்தபடியாக கொடைரோடு என்று ஒரு ரெயில் நிலையம் வரும். கொடைக்கானல் செல்பவர்கள் வசதிக்காக அந்த ரெயில் நிலையம் அமைக்கப்பட்டது. சிறுவயதில் எங்கள் ஊருக்கு நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிக்கும் போது நள்ளிரவில் இந்த ரெயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று செல்வதைக் கண்டுள்ளேன். அது போல் சேலம் செல்லும் வழியில் வாழப்பாடி ரோடு என்று ஒரு ரெயில் நிலையமும் வருகிறது. வாழப்பாடிக்கு செல்பவர்களுக்கு அந்த ஊருக்கு பின்புறம் அமைந்த இந்த ரெயில் நிலையம் பயனளிக்கும் விதமாக அமைக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் நங்கநல்லூர் ரோடு ரெயில் நிலையமும் அமைக்கப்பட்டுள்ளதோ என்று எண்ணினேன். ரெயில் நிலையம் அமைந்துள்ள இடத்தின் அருகில் எவ்வித சாலையும் நங்கநல்லூருக்கு செல்லவில்லை. ஆதம்பாக்கத்திற்கும் தில்லை கங்கா நகருக்கும் செல்வதற்கு வேளச்சேரி நெடுஞ்சாலை உள்ளது.மற்றபடி இந்திய இராணுவத்தின் பெருமக்குரிய அதிகாரிகள் பயிற்சி அகாடமி (ஓ.டி.ஏ.) இந்த ரெயில் நிலையத்தின் நேர் எதிரே அமைந்து உள்ளது. இந்தியாவில் சென்னையிலும் மிகச் சமீபத்தில் பீகாரில் உள்ள கயாவிலும் தான் அதிகாரிகள் பயிற்சி அகாடமி உள்ளது. தொன்மை வாய்ந்த ஓ.டி.ஏ. பெயரை சூட்டாமல் எங்கோ இருக்கிற நங்கநல்லூரை தொடர்பு படுத்தி நங்கநல்லூர் ரோடு என்று பெயரிட்டது என்ற ஆர்வம் எனக்கு ஏற்பட்டது.  அதன் பின்னர் நான் நங்கநல்லூருக்கு ஒருமுறை விஜயம் செய்தேன்.
சென்னை அண்ணாநகரை நினைவு படுத்தும் வகையில் பல சாலைகள் அகலமாகவும் நேர்த்தியாகவும் இருந்தன. ஒரு கிரவுண்ட் நிலத்தில் சிறிய வீடு வீட்டைச்சுற்றி காலியிடங்கள் என 1970களில் வீடு கட்டியவர்களின் மனப்போக்கை நங்கநல்லூர் நன்றாக படம் பிடித்துக் காட்டியது. இப்போது தான் பழைய வீடுகள் இடிக்கப்பட்டு அடுக்கு மாடி வீடுகள் கட்டப்படுகின்றன. குறிப்பாக சொல்லப் போனால் அக்ரஹாரம் என்று அழைக்கப்படும் அளவிற்கு இந்த இடத்தை சுற்றிலும் பிராமணர்கள் அதிகம் இருகிறார்கள். பக்கத்தில் பழவந்தாங்கலில் தான் நெரிசல் காணமுடிகிறது. நங்கநல்லூரை ஒட்டியுள்ள உள்ளகரம், தில்லைகங்கா நகர், பழவந்தாங்கல் மூவரசம்பேட்டை ஆகிய பகுதிகளுக்கும் நங்கநல்லூருக்கும் இடையே நல்ல வித்தியாசம் உள்ளது. 1960களின் இறுதியில் இப்பகுதி விவசாய விளை நிலமாக இருந்துள்ளது. எழுபதுகளின் தொடக்கத்தில் பிளாட் போடப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. மைலாப்பூரில் வீடு வாங்க முடியாதவர்கள் சொல்லிவைத்து வாங்கியது போல் தங்களுக்கென்று கூட்டாக வாங்கி தங்களுக்கென்று தனியிடத்தை அமைத்துக் கொண்ட இடமாகத்தான் நங்கநல்லூர் இருக்கிறது. ரியல் எஸ்டேட் காரர்கள் இவர்களை கவரவேண்டும் என்ற காரணத்திற்காக கோவில்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்திருப்பதும் தெளிவாக தெரிகிறது. அருகாமையில் உள்ள தில்லைகங்கா நகருக்கு பெயர் சூட்டப்பட்டதும் இந்த நோக்கத்தில் தான்.
புராணகாலத்தில் பிரபலமாக இருந்து பழவந்தாங்கல் (பல்லவன்தாங்கல் என்றும் அழைக்கிறார்கள்) கிராமத்தின் அடையாளங்கள் மாறிவிட்டன. இந்த கிராமத்தில் 60களின் இறுதியில் 70களின் துவக்கத்தில் புறநகர் ரெயில் நிலையம் அமைக்கப்பட்டபோது அதற்கு நங்கநல்லூர் என்று பெயரிடவேண்டும் என்று நங்கநல்லூர் வாசிகள் தங்களுக்கு இருந்த செல்வாக்கையெல்லாம் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் பழவந்தாங்கல் வாசிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த போராட்டம் காரணமாக பழவந்தாங்கல் என்று அந்த ரெயில் நிலையத்திற்கு பெயர் சூட்டப்பட்டது. தங்கள் ஆதிக்கம் செல்லுபடியாகவில்லையே என்று கறுவிக்கொண்டிருந்தவர்களுக்கு மெட்ரோரெயில் வரப்பிரசாதமாக அமைந்தது. தங்கள் முழுபலத்தை இதில் காட்டி வெற்றி பெற்று இருப்பது தெளிவாகத் தெரிகிறது.
40 ஆண்டுகாலம் காத்திருந்து தங்கள் எண்ணத்தை இப்போது ஈடேற்றிக் கொண்டார்கள். இதற்கு பெரிதாக எதிர்ப்பு கிளம்பாததற்கு நம் ஊடகங்களும் அதில் உள்ளவர்களுக்கு எந்த ஆர்வமும் இல்லாமல் இருப்பதும்தான் காரணம் என்றும் சொல்லலாம்.

No comments:

Post a Comment