Thursday, March 12, 2015

என் முதல் ரேடியோ!

1989ல் நான் பி.ஏ. முடித்துவிட்டு அடுத்து என்ன செய்வது என்று யோசிக்காமல் என் தந்தையாரின் வியாபாரத்தை கவனித்துக் கொண்டு இருந்த நேரம். சினிமா பாடல்கள் தான் ஒரே பொழுது போக்கு. விவிதபாரதி, சென்னை அலைவரிசை ஒன்று, இலங்கை வானொலியின் தமிழ்ச்சேவை என எந்த நேரத்தில் எங்கு தமிழ்பாடல்கள் ஒலிபரப்பப்படும் என்று அப்போது விரல் நுனியில் தகவல் வைத்திருப்போம். அப்பா மிகவும் கண்டிப்பு. முன்பு ஒருமுறை ரேடியோ ஒன்றை தூக்கிப்போட்டு உடைத்திருந்தார். ஆகவே ரேடியோவில் பாட்டு கேட்பது என்பது அவர் இல்லாத போது தான். அப்போது பக்கத்துக் கடை எலக்டிரிக் பொருட்கள் விற்கும் கடை. கடைக்காரர் கைக்கு அடக்கமான பழைய பிலிப்ஸ் ரேடியோ வைத்திருப்பார். அவர் கடை திறந்ததும் அதில் பாட்டு வைப்பார். அவர் விரும்பும் போது பாடல் கேட்கும். மற்ற நேரம் நிறுத்தி விடுவார். வாரத்திற்கு 2 பேட்டரி ஆகிறது என்று சலித்துக் கொள்வார்.
எங்களுக்கு இருந்த ஒரே ஆறுதல் அது தான்.
அந்த காலகட்டத்தில் ஒரு நாள் என் வியாபார விஷயமாக ஒருவரை காணச் சென்ற போது அவர் நேஷனல் ரேடியோ ஒன்றை வைத்திருந்தார். கருப்பு நிறத்தில் கைக்கு அடக்கமாக மிகவும் அழகாக அந்த ரேடியோ இருந்தது. ரேடியோவில் இருந்து வந்த பாடல்களின் தெளிவு நண்பர் வைத்திருந்த பிலிப்ஸ் ரேடியோவை விட இனிமையாக தெளிவாக இருந்தது. கையிலே வாங்கி பார்த்தேன். பள பள என்று என் கையில் மின்னியது.


இதை எங்கே வாங்கினீர்கள் என்று அந்த நபரிடம் கேட்டேன். அதற்கு அவர், தம்பி நான் இதை பர்மா பஜாரில் வாங்கினேன். 150ரூபாய் என்றார் பெருமையாக.
எனக்கோ எப்படியும் இதைப் போன்று ஒரு ரேடியோவை வாங்கிவிட வேண்டும் என்ற வெறி ஏற்பட்டது. அப்பாவிடம் கேட்டால் நிச்சயமாக அனுமதி கிடைக்காது.
ஏச்சுத் தான் மிஞ்சும். ஆனால் இந்த ரேடியோ என் கண் முன்னாலேயே நின்றது.
எப்படியாவது அப்படி ஒரு ரேடியோவை வாங்கிவிட வேண்டும் என்று தீர்மானித்தேன். தீர்மானம் தீவிரமானது. ஒவ்வொரு நிமிடமும் ஆசை அதிகரித்துக் கொண்டே போனது.
வெறி கனவிலும்விடவில்லை. மறுநாள் என் கையில் அந்த ரேடியோ தவழ்வது போல கனவு கண்டேன். என்னால் அன்று உறங்கவே முடியவில்லை. அந்த ரேடியோவை எப்படி வாங்குவது என்ற எண்ணம் தான் மேலோங்கி இருந்தது.
மறுநாள் மாலையில் என் கையில் வியாபாரத்தின் போது என் கைவசம் இருந்த பணத்தை எல்லாம் திரட்டி (160ரூபாய் தேறியது) எடுத்துக் கொண்டு பர்மா பஜாருக்கு சைக்கிளில் சென்றேன். (அப்போது 160ரூபாய் என்றால் பெரிய விஷயம். அப்பா விளாசிவிடுவார் என்ற பயம் வேறு)
மந்தைவெளியில் இருந்து பாரிமுனைக்கு சைக்கிளில் பறக்கத்தான் செய்தேன். மனதில் இருந்த ஒரே வெறி, நான் பார்த்த அந்த ரேடியோ போன்று ஒரு ரேடியோவை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்பது தான். அன்றைக்கு இருந்த பர்மா பஜார் கடைகளில் பல கடைகளில் இந்த ரேடியோவை தொங்க விட்டு இருந்தார்கள். விசாரித்தால் 175ரூபாய் என்றார்கள். கையில் அவ்வளவு காசிருந்தால் பேசாமல் முதல் கடையிலேயே வாங்கியிருப்பேன். கையில் இருந்தது 160ரூபாய் தான். கைக்காவலுக்குக் கூட வேறு பணம் இல்லை. கடை கடையாக ஏறி இறங்கினால் வழியே இல்லை. நாம் கேட்டதும், நம்மை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துவிட்டு பின்னர் 175ரூபாய் என்பார்கள் 180ரூபாய் என்பார்கள். மாலை நேரம் இருட்டாகிக் கொண்டிருந்தது. அப்பா தேடத் தொடங்கிவிடுவார்கள். தம்பியிடம் லேசாக காதைக் கடித்துவிட்டு வந்திருந்ததால் அவன் அப்பாவை சமாளிப்பான் என்று மனதில் நம்பிக்கை இருந்தது.
கடைக்காரர்கள் சளைக்கவே இல்லை. சுமார் 200 கடைகளில் நான் 75 கடைகளை தாண்டியிருப்பேன். பின்னர் தான் யோசித்தேன். எடுத்தவுடன் ரேடியோவை கேட்பதால் அதற்கு விலை வைக்கிறார்கள், எனவே வேறு பொருளை முதலில் கேட்போம் என்ற உத்தி மனதில் தோன்றியது.

அதே போல் ஒரு கடையில் போய், அங்கிருந்த ஒரு கால்குலேட்டரை விலை கேட்டேன். உடனே அந்த கடைக்காரர் என்னை ஏற இறங்க பார்த்து விட்டு யானை விலை சொன்னார். நான் உடனே அடேயப்பா, நிறைய விலை சொல்கிறீர்களே என்றேன். உடனே அவர், தம்பி, கால்குலேட்டர் இப்போது கடும் கிராக்கி, அதிகம் கொண்டு வரமுடியவில்லை அதான் இந்த விலை. இந்தா இந்த ரேடியோ 150ரூவா தான் என்றார். நான் எதிர்பார்த்து சென்ற அதே ரேடியோ, ஆனால் சிகப்பு நிறம். கருப்பு ரேடியோவை விட மிகவும் அழகாக இருந்தது.
நான் வேண்டா வெறுப்பாக அந்த ரேடியோவை பார்ப்பது போல் பார்த்துவிட்டு, 150ரூபாய்க்கு அப்படி என்ன இருக்கிறது, டெல்லி செட் 40-50க்கு கிடைக்கிறதே என்றேன். தம்பி இது இந்தோனேசியாவில் இருந்து வருகிறது என்றார். நான் என் மனதில் ஏற்பட்ட குதூகலத்தை வெளியில் காட்டாமல் அவரிடம், சரி வந்ததற்கு இதையாது வாங்கிக் கொள்கிறேன் என்று கூறி, 150ரூபாயை கொடுத்துவிட்டு அந்த ரேடியோவை வாங்கி சட்டைப் பைக்குள் திணித்துக் கொண்டு சைக்கிள் நிறுத்திய இடத்திற்கு விரைந்தேன்.
மனதில் ஏகப்பட்ட மகிழ்ச்சி. என் துள்ளல் நடை தான் என் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கும். முகத்தை கட்டுப்படுத்திக்கொண்டு என் கடைக்குத் திரும்பினேன். மீதமிருந்த 10 ரூபாய்க்கு 2 செல் வாங்கிக் கொண்டு கடைக்குச் சென்றேன். தம்பி எனக்காக ஆவலுடன் காத்திருந்தான். நேரம் இரவு 9 மணி ஆகியிருந்தது. ரேடியோவை அப்பாவிற்குத் தெரியாமல் கடைக்கு பின் இருந்த வீட்டுக்கு கொண்டு சென்று, அங்கு கழுகுக் கண்களையும், போலீஸ் மோப்பநாயின் கூர்மையான மோப்ப சக்தியையும் கொண்டிருந்த மற்ற உடன்பிறப்புகளின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு மொட்டை மாடிக்கு கொண்டு சென்று ரேடியோவை ஒளித்து வைத்துவிட்டு கீழே வந்தோம்.
இரவு உணவு முடிந்ததும் வழக்கமாக படுக்கப் போவது போல் சென்று மொட்டை மாடியில் வைத்து ரேடியோவை ஆன் செய்து பாட்டு கேட்ட போது கிடைத்த அந்த இன்பம், மகிழ்ச்சி ஆனந்தம், அதை விவரிக்க வார்த்தை கிடையாது.
மறுநாள் காலை, பக்கத்துக் கடைக்காரர் வருவதற்கு முன்னரே எங்களிடம் இந்த ரேடியோவில் இருந்து பாடல் தாலாட்டிக் கொண்டிருந்தது.
சென்னை அலைவரிசை ஒன்று, விவிதபாரதி மட்டுமின்றி, இலங்கை வானொலியையும் துல்லியமாக கேட்க வைத்தது அந்த ரேடியோ.
சுமார் 4 வருடங்களுக்கும் மேல் அந்த ரேடியோ எங்களுக்கு பாடல்களை வழங்கியது. அதன்பின்னர் எப்.எம். ரேடியோ வரத்தொடங்கியது. நாங்கள் டேப் ரெக்கார்டர் அசெம்பிள் செய்து ஆம்பிளிபையருடன் பாடல்களை கேட்கத் தொடங்கினோம். அப்போது மற்றவர்கள் கைப்பட்ட அந்த ரேடியோ உடைந்தது.
பின்னர் கண்ணில் காணாமல் போனது. அதன் பின் எத்தனையோ ரேடியோக்கள் வாங்கினாலும், அந்த சிகப்பு நிற நேஷனல் ரேடியோ கொடுத்த சந்தோசம் வேறு எதிலும் கிடைத்ததில்லை.
ரேடியோ ஒன்று புதிதாக நம்மிடம் இருக்கிறதே என்று என் அப்பா ஒரு நாள் கூட கேட்கவில்லை. அது இன்னொரு வியப்பு.

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன்... இது போல் என்னிடத்திலும்...

Ponchandar said...

அட இந்திய விமானப்படையில் சேர்ந்தவுடன் எனது பெரியப்பா அன்புடன் தந்தது இதே சிகப்பு கலர் ரேடியோ....பெல்ஹாம் வரை இலங்கை ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனத்தின் அலைவரிசை கேட்கும்...... இரவின் மடியில் நிகழ்ச்சி கேட்ட பிறகுதான் தூங்கச் செல்வேன்......

காரிகன் said...

வானொலி பற்றிய நல்ல பதிவு. நான் கூட இதே சிவப்புக் கலர் ட்ரான்சிஸ்டர் வைத்திருந்தேன்.

Rathnavel Natarajan said...

அருமை. வாழ்த்துகள்.

Post a Comment