Monday, February 20, 2012

வட நாட்டு ஊடகங்களும் ஊழலும்!

மும்பையிலிருந்து தில்லிக்கு ரெயிலில் வந்து கொண்டிருந்தேன். சக பயணிகள் அனைவரும் 40 வயதை தாண்டியவர்கள். மூவர் 60 வயதை தாண்டியவர்கள். ரெயில் புறப்பட்ட சிறிது நேரத்தில், ஒவ்வொரும் நலம் விசாரித்து பேச்சை தொடங்கினார்கள். மெல்ல அரசியல் பற்றி பேச்சு திரும்பியது. நான் தென்னிந்தியன் என்பதை தெரிந்து கொண்டவர்கள், கருணாநிதியைப்பற்றி பேசினார்கள். 2ஜி விவகாரத்தால் அவர் பதவியை இழந்தது பற்றி விரிவாக விவாதித்தனர். நான் மவுனம் சாதித்தேன்.
டிக்கெட் பரிசோதகர் வந்ததும் என் பெயரை விசாரித்தார். அடையாள அட்டையை பார்த்து சிதம்பரம்? என்று வினவினார். நான் சிதம்பரநாதன் என்றேன். உடனே நமட்டு சிரிப்பு சிரித்து விட்டு சென்றார். அதன்பின் மற்ற பயணிகள் என்னைப்பார்த்து 2ஜி பிரச்சினையில் தேவையில்லாமல் சிதம்பரத்தின் பெயரை இழுக்கிறார்கள் என்றனர். நான் சொன்னேன், அவருக்கும் மேல் யாராவது பயனாளிகள் இருப்பது போல் பேச்சு அடிபடுவதால் இந்த விவகாரம் இனி பெரிதுபடுத்தப்பட மாட்டாது என்றேன். உடனே, அவர்கள், சிதம்பரத்திற்கே இதில் தொடர்பிருக்காது, அவர் தூய்மையானவர், எப்படி வெள்ளை வேட்டி அணிந்து பளீரென்று இருக்கிறார், அவர் ஊழல் செய்திருக்க மாட்டார் என்றார்கள். நான் சிரித்தேன்.
இந்த பிரச்சினையில் மேலும் பல தலைகள் இருப்பதாக ராஜா மிரட்டியதால் தான் கனிமொழிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது என்று ஒரு பேச்சு அடிபடுகிறது தெரியுமா என்றேன். பயணிகள் யாருமே இதனை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.
ராஜா மட்டும் தான் இந்த ஊழலை செய்திருப்பார், கருணாநிதி தான் இந்த ஊழலுக்கு காரணம் என்றார்கள். நான் உங்கள் மொழி ஊடகங்களில் இது பற்றி வேறு தகவல் ஏதேனும் வெளியிடப்படுகிறதா என்றபோது, இந்த ஊழலில் சோனியா பெயரோ அல்லது சிதம்பரம் பெயரோ அடிபடவே இல்லை என்றார்கள்.
சோனியா நல்லவர் என்றார்கள். (நல்ல வேளை அவர் சேலை அணிவதால் அவர் தவறு செய்யமாட்டார் என்று சொல்லாமல் விட்டார்கள்). நான் சொன்னேன், உங்கள் ஊடகங்கள் உங்களுக்கு முழுமையான செய்தியை வழங்குவதில்லை, அதனால் உங்களுக்கு உண்மை நிலவரம் தெரிவதில்லை.
அதற்கு அவர்கள் அனைவரும் ஒரு அணியில் திரண்டு மறுத்தார்கள்.
நான் உடனே, உங்களில் யாருக்காவது “கேதன் தேசாய்” யார் என்று தெரியுமா என்றேன். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். ஒருவர் சொன்னார், பெயரை கேள்விப்பட்டு இருக்கிறேன், திரைப்பட இயக்குநராக இருக்கலாம் என்றார்.
நான் பல முறை கேட்டுவிட்டு சொன்னேன், கேதன் தேசாய், இந்திய மருத்துவக் கவுன்சிலின் தலைவராக இருந்தவர். அவர் வீட்டில் இருந்து 1800 கோடி ரூபாய் ரொக்கப்பணம், ஒன்றரை டன் தங்கம் ஆகியவற்றை சி.பி.ஐ. பறிமுதல் செய்தது. இந்த செய்தி ஒரு நாள் மட்டும் பத்திரிக்கைகளில் வந்தது. அதன்பின் எந்த செய்தியும் வரவில்லை.
ஆனால், கனிமொழி ஜாமீன் மனு விசாரணைக்கு வரும்போதெல்லாம், ஒவ்வொரு முன்னணி நாளிதழும் 16 முதல் 18 செய்திகளை கனிமொழி மற்றும் ராஜாவிற்கு எதிராக பிரசுரித்து, ஜாமீன் கிடைக்காமல் செய்து வந்தன. இது தான் வட இந்திய ஊடகங்களின் பத்திரிக்கை தர்மம். அவர்களைப்பொருத்தவரை, வடஇந்தியர்கள் செய்வது ஊழல் அல்ல. ரொக்கப்பணம் ரூ1800 கோடி, 1500 கிலோ தங்கம் கையும் களவுமாக பிடிபட்ட ஒருவரைப்பற்றி செய்தியே இல்லை. பணப்பரிமாற்றம் குறித்த எந்த ஒரு ஆதாரமும் நிரூபிக்கப்படாத 2ஜி ஊழல் பற்றி மட்டும், அதுவும் கருணாநிதி குடும்பம் பற்றி மட்டும் கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுகிறார்கள் என்றேன்.
வாயடைத்துப்போன மற்றப்பயணிகள், விவாதத்தை மாற்றிக்கொண்டார்கள்.

No comments:

Post a Comment