Saturday, February 25, 2012

சுங்கம் தவிர்த்த சோழன்

மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன் அவர்கள் சமீபத்தில் ஓய்வு பெற்றார். ஓய்வி்ற்குப்பின் பெங்களூரில் குடியேறுகிறார். அவருக்கு தில்லியில் உள்ள தமிழ் அதிகாரிகள் பிரியாவிடை கொடுத்தார்கள்.
தில்லியில் உள்ள தமிழ்நாட்டை சேர்ந்த அதிகாரிகள் அனைவரையும் ஓரணியில் திரட்ட வேண்டும் என்று முயற்சித்து அதில் பெரும் வெற்றி பெற்றவர். சிரிக்க சிரிக்க பேசுவதில் அவரை மிஞ்ச யாரும் இல்லை.
பிரிவு உபசார நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழ் மொழியின் சிறப்பைப்பற்றி பேசிக்கொண்டிருந்தார்.
தமிழ் மொழி இழந்த நிலப்பரப்பை அவர் பட்டியலிட்டார்.  முதலாம் குலோத்துங்க சோழன், தமிழனுக்கென துறைமுகம் வேண்டும் என்று தேடி அமைத்தது தான் குலோத்துங்கப்பட்டினம். துறைமுகத்திற்கு வரும் கப்பலில் வரும் கடலோடிகளுக்கு தேவையான வசதிகள் இல்லாத காரணத்தால் அந்த துறைமுகம் அதிக பிரபலமடையவில்லை. எனவே அந்த துறைமுகத்திற்கு வரும் கப்பல்கள் கொண்டு வரும் பொருட்களுக்கு சுங்க வரி விலக்கு அளித்தான். அதனால் அவனுக்கு சுங்கம் தவிர்த்த சோழன் என்று பெயர் வந்தது.

துறைமுகம் பிரபலமடையத் தொடங்கியதும், மன்னன், தன் அமைச்சர்களை அழைத்து, நாம் படையெடுத்து வந்த இடத்தில் நம் பெயரைக் கொண்டு பெயரிட்டால், அந்த நாட்டு மக்களுக்கு அதனை தாங்கிக்கொள்ள மனம் இருக்காது, எனவே துறைமுகத்தின் பெயரை மாற்றுங்கள் என்று சொன்னான். அமைச்சர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் தன் முடிவில் மன்னன் பிடிவாதமாக இருக்கவே, வேறு வழியில்லாமல், மன்னனின் நட்சத்திரத்தைக் கொண்டு அந்த துறைமுகத்திற்கு பெயரிட்டார்கள். அப்படி அழைக்கப்பட்டது தான் விசாகப்பட்டினம்.

இதற்கான ஆதாரங்கள் விசாகப்பட்டினத்திற்கு முன்னால் உள்ள கோவிலில் கல்வெட்டுக்களாக இருக்கின்றன என்றும் திரு பாலச்சந்திரன் அவர்கள் சொன்னபோது, புதிய தகவலை அறிந்து கொண்ட மனநிறைவு ஏற்பட்டது.

No comments:

Post a Comment