Monday, October 11, 2010

ரஷ்ய நீர்மூழ்கிக்கப்பல் குர்சிற்கு ஏற்பட்ட கதி!!!




நீர்மூழ்கிக்கப்பல் பற்றி எழுதியபோது, இந்த பயணம் எவ்வளவு ஆபத்தானது என்பதைப்பற்றியும் எழுதினால் நன்றாக இருக்குமே என்று எனக்குப் பட்டது. போரில் எவ்வளவோ நீர்மூழ்கிக்கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்ட செய்திகளைப்படித்தாலும் ரத்தத்தை உறையவைக்கும் அதே நேரம் பரபரப்பு நிறைந்த விபத்து ஒன்றைப்பற்றி இங்கே குறிப்பிட விரும்புகிறேன். இந்த விபத்து மிகச்சமீபத்தில் அதாவது 2000ம் ஆண்டில் நடைபெற்றது.
ரஷ்யாவின் அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக்கப்பல் பெயர் குர்ஸ்க். இந்த பெயர் உலக இராணுவ வரலாற்றில் மிகப்பெரிய டாங்கிகள் பங்கேற்ற போர் நடைபெற்ற ரஷ்ய நகரமான குர்ஸ்க் என்பதன் நினைவாக சூட்டப்பட்டது.

இந்த போர் 1943ம் ஆண்டு நடைபெற்றது.

இந்த குர்ஸ்க் நீர்மூழ்கிக்கப்பல் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தது.
ரஷ்யா புதிதாக மேம்படுத்திக்கொண்டு இருந்த டோர்பீடோ குண்டுகளை பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. இந்த பரிசோதனை ரஷ்ய போர்க்கப்பல் பியோட்ர் வெலிக்கிய் மீது நடத்தப்பட்டது. டோர்பீடோவில் வெடி மருந்து ஏதும் பொருத்தப்படவில்லை. ஆகவே டோர்பீடோ தாக்கினால் கப்பலுக்கு ஒன்றும் ஆகாது.
இங்கே டோர்பீடோ என்றால் என்ன என்று சொல்லவேண்டும். நிலத்தில் இருந்து நாம் ராக்கெட் விடுகிறோம். ராக்கெட் நுனியில் வெடிபொருளைவைத்து இலக்கை தாக்கும் போது அது இலக்கை அழித்து தரைமட்டமாக்குகிறது. (இதன் வகைகள் பற்றி பிறகு பார்ப்போம்).

ஆனால் தண்ணீரில் அப்படி இல்லை. இலக்கு நோக்கி ராக்கெட்டுகள் பாய்ந்தாலும், மோதல் வேகமாக இருக்காது. கடல் நீரின் உப்புத்தன்மைக்கு ஏற்ப அதன் அடர்த்தி அதிகரி்க்கும். அப்போது கடலுக்குள் செலுத்தப்படும் எதுவும் வேகமாக செலுத்தமுடியாது. கடலுக்குள் ராக்கெட்டை செலுத்த முடியாது. ஏனெனில், தண்ணீரில் எறிவியல் தத்துவங்கள் தோற்றுப்போய்விடும். எனவே தண்ணீரில் பாய்ந்து செல்ல கப்பல் போன்று, வழி கண்டுபிடித்து தானாக செல்லக்கூடிய ராக்கெட் போன்ற ஒரு பொருளைக் கண்டு பிடித்தார்கள். அதன் பெயர் தான் டோர்பீடோ. நீண்ட ராக்கெட் போன்று இருந்தாலும், கடலில் செலுத்தப்பட்டதும் அதனுள் ரசாயனக்கலவை மாறி மின் உற்பத்தி ஏற்பட்டு அதன் மூலம் அதன் சுழல் இறக்கைகள் சுழன்று முன்னெட்டிப்போக வைக்கின்றன. (சில எரிவியல் டோர்பீடோக்களும் உள்ளன. அவற்றின் ஆற்றல் குறைவு). இந்த டோர்பீடோ அதன் இலக்கை தேடிப்பிடித்து, அதனுள் இருக்கும் உணர்மானிகள் இலக்கை அடைந்ததாக உணர்ந்ததும் இதனுள் இருக்கும் வெடிபொருள் வெடிக்கும். அந்த அதிர்வு இலக்கு கப்பலுக்குள் சேதத்தை உண்டாக்கும். இந்த டோர்பீடோக்களை துல்லியமாக இயக்க, இலக்கின் அருகாமையில் இருந்து இதனை இயக்க வேண்டும் என்பது அவசியம். இதில் தான் ஆராய்ச்சியில் ஒவ்வொரு நாடுகளும் பணத்தை செலவிட்டுக்கொண்டு இருக்கின்றன. இந்த ஆராய்ச்சிக்காகத் தான் குர்ஸ்க் பயன்படுத்தப்பட்டது.

2000ம் ஆண்டு ஆகஸ்ட் 12ந்தேதி காலை 11 மணியளவில் பேரண்ட்ஸ் கடலில் இந்த சோதனை நடைபெற்றது. நீர்மூழ்கிக்கப்பலில் இருந்து டோர்பீடோக்கள் செலுத்தப்பட்டன. ஆனால் டோர்பீடோக்களின் உடலில் ஏற்பட்டு இருந்த சேதம் காரணமாக டோர்பீடோ செலுத்தப்பட்டதும் அது வெடித்தது. சுமார் 100-250 கிலோ எடை கொண்ட டி.என்.டி. யால் ஏற்படும் அளவு இந்த வெடிவிபத்து இருந்தது. ரிக்டர் அலகில் 2.2 பதிவானது.

இதனால் நீர்மூழ்கிக்கப்பலின் டோர்பீடோ செலுத்தும் துவாரம் சேதம் அடைந்தது. இந்த சம்பவம் நிகழ்ந்து சரியா இரண்டேகால் நிமிடத்தில் மற்றோர் வெடிச்சத்தம். 3-7 டன் டி.என்.டி. வெடிகுண்டுகளை பயன்படுத்தியதற்குச் சமமான சத்தம். இதனால் ஏற்பட்ட அதிர்வின் அலகு. 3.5 முதல் 4.4 ரிக்டர் அளவு என்று கூறுகிறார்கள்.

கடல் நீர் புகுந்ததில் நீர்மூழ்கிக்கப்பல் செங்குத்தாக கடலுக்குள் 46 மீட்டர் ஆழத்திற்கு பாய்ந்து அடியில் உள்ள களிமண் தரையில் 2 மீட்டர் ஆழத்திற்கு அதன் முகப்புப் பகுதி சொருகி நின்றது. கடல் மேல் மட்டத்தில் இருந்து தரையோ வெறும் 108 மீட்டர் ஆழம் தான்.

நீர்மூழ்கிக்கப்பலினுள் 118 மாலுமிகளும் அதிகாரிகளும் இருந்தனர். அவர்கள் உடனடியாக உயிரிழந்துவிட்டனர் என்று கூறி ரஷ்யா எவ்வித மீட்பு நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. ஆகஸ்ட் 18ந்தேதி பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் மாலுமி ஒருவரின் தாய் கதறி அழ, அவரை சாந்தப்படுத்த நர்ஸ் ஒருவர் மயக்க ஊசியை பின்னால் இருந்து குத்த, அது தொலைக்காட்சியில் பதிவாகிவிட்டது. இந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படு்த்தியது.

நீர்மூழ்கிக்கப்பல்களில் காற்றுப்புகாத அறைகளுக்குள் வீரர்கள் இன்னும் உயிருடன் இருப்பார்கள் என்ற கருத்து நிலவியபோது, ரஷ்யா மவுனம் சாதித்தது. மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணி பாதிக்கப்படுவதாகவும், மீட்பு வசதி இல்லை என்றெல்லாம் கூறியது. அமெரிக்காவும் இங்கிலாந்தும் நார்வேயும் மீட்புக்கு உதவுவதாக முன்வந்தபோது ரஷ்யா மறுத்தது.

பின்னர் உள்நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக வேறு வழியின்றி 4 நாட்கள் கழித்து இங்கிலாந்து மற்றும் நார்வே உதவிக்கு ரஷ்யா சம்மதித்தது. நார்வேயின் மீட்புக்கப்பல் 19ந்தேதி விபத்து நடந்த இடத்தை அடைந்தது. 20ந் தேதி மீட்பு பணி தொடங்கியது. அனைத்து கம்பார்ட்மென்ட்களிலும் தண்ணீர் புகுந்து இருந்ததால் கப்பலுக்குள் இருந்த 118 பேரும் உயிரிழந்ததை உறுதி செய்தனர். அவர்களில் பலர் உடல்களை மீட்கவே மாதக்கணக்கில் ஆயிற்று.

உடல் மீட்கப்பட்டவர்களில் கேப்டன் லெப்டினன்ட் டிமிட்ரி கோலெஸ்னிகோவும் ஒருவர். அவர் சட்டைப்பையில்அவர் பென்சிலால் எழுதிய குறிப்புகள் கண்டெடுக்கப்பட்டது. எப்படியும் மீட்டு விடுவார்கள் என்று அவருடன் அந்த சேம்பரில் இருந்த 23 பேரும் காத்திருந்தனர் என்ற தகவல் அந்த குறிப்பில் இருந்தது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவர்கள் குறைந்தது 3 மணி நேரமாவது உயிருடன் இருந்திருப்பார்கள் என்று கூறியது, இந்த நீர்மூழ்கிக்கப்பலை கடலுக்கடியில் இருந்து மீட்ட டச்சு நிறுவனம். உயிருக்கு போராடியவர்கள் பற்றி பல்வேறு விதமான செய்திகள் வந்தன. அனைவருடைய நெஞ்சையும் பிசைந்தது. உலகெங்கும் கண்டனங்களும் அனுதாபங்களும் குவிந்தன.

இவற்றிற்கெல்லாம் ரஷ்யா அசரவில்லை. டோர்பீடோ விபத்தில் நீர்மூழ்கிக்கப்பல் விபத்து ஏற்பட்டதாக கூறி 2002 ம் ஆண்டில் விசாரணையை முடித்துக்கொண்டது. விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு வீரச்செயலுக்கான விருதுகளை (Order of Courage ) வழங்கியது. நீர்மூழ்கிக்கப்பல் கேப்டனுக்கு ரஷ்ய கூட்டமைப்பின் நாயகன் (Hero of Russian Federation) என்ற பட்டத்தை வழங்கியது.

இது இப்படி இருக்க, இந்த விபத்திற்கு இன்னொரு காரணமும் கூறப்படுகிறது.

இந்த பயிற்சி நடைபெற்றபோது அமெரிக்காவின் நீர்மூழ்கிக்கப்பல்கள் யூ.எஸ்.எஸ். மெம்பிஸ் மற்றும் டொலெடா ஆகியவை மிகவும் நெருக்கமாக கண்காணித்தன. இங்கிலாந்து நீர்மூழ்கிக்கப்பல் எச்.எம்.எஸ். ஸ்பிளென்டிட்டும் இருந்தது. அமெரிக்க நீர்மூழ்கிக்கப்பலில் ஒன்று தான் இந்த நீர்மூழ்கிக்கப்பலை தாக்கி தகர்த்து இருக்க வேண்டும் என்றும், இந்த தாக்குதலில் அமெரிக்க நீர்மூழ்கிக்கப்பல்கள் இரண்டும் சேதம் அடைந்தன என்றும் மெம்பிஸ் நார்வே துறைமுகம் ஒன்றில் பழுதுபார்க்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாயின. குர்ஸ்க் நீர்மூழ்கிக்கப்பலின் இடிபாடுகளுடன் அமெரிக்க மற்றும் இங்கிலாந்து நீர்மூழ்கிக்கப்பலின் பாகங்கள் கிடந்ததாகவும் செய்திகள் வெளியாயின. ஆனால் இது பற்றி ரஷ்யா ஏனோ சர்வதேச அரங்கில் பிரச்சினை எழுப்பவில்லை.

பனிப்போரின் இறுதியில் அமெரிக்கா தன் வீரத்தை இப்படிக்காட்டிக்கொண்டதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

குர்ஸ்க் நீர்மூழ்கிக்கப்பலின் விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது இன்னும் புதிராகவே உள்ளது.


1 comment:

Siva Ranjan said...

உங்க கிட்ட இருந்து நிறைய விடயங்கள் கிடைக்கும் போல இருக்கே... :)

Post a Comment