நாங்கள் நாடெங்கிலும் உள்ள செய்தியாளர்கள் 31 பேர் ஒரு மாத காலம் விசாகப்பட்டினம் மற்றும் வடகிழக்கில் சுற்றுலா சென்றோம். (இது பாதுகாப்புத்துறை செய்தியாளர்களுக்கான பயிற்சி). ஒவ்வொரு இடங்களிலும் நாங்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓட்டலில் இருந்து விரிவுரை, விளக்கவுரை வழங்கப்படும் இடத்திற்கு அன்றாடம் வாகனங்களில் அழைத்துச்செல்லப்பட்டோம். தனித்தனி குழுவாக பிரிக்கப்பட்டதில் என் வாகனத்தில் கேரள மாநிலத்தை சேர்ந்த செய்தியாளர்களும், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த, தில்லியில் பணியாற்றும் செய்தியாளர் ஒருவரும் பயணித்தனர். ஒவ்வொரு நாளும் சுமார் இரண்டு மணிநேரத்திற்கு பயணிக்க வேண்டும் என்பதால் அவரவர் கைப்பேசியில் பதிவு செய்திருந்த பாடல்களை ஒலிக்கச்செய்து கேட்டு மகிழ்ந்து வந்தோம். என்னிடம் இளையராஜாவின் 80 களின் படப்பாடல்கள் இருந்தன.
இப்பாடல்கள் அனைத்தும் கேரள நண்பர்களுக்கு அத்துபடி ஆக இருந்தது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. பாடகர் ஜெயச்சந்திரன் மற்றும் ஜேசுதாஸ் பாடல்களை சேர்ந்து பாடினார்கள். நாங்கள் மெஜாரிட்டியாக இருந்ததாலும், பீகார் மாநில நண்பர் நல்ல பண்பாளர் என்பதாலும் வேறு வழியின்றி பாடல்களை கேட்டுவந்தார். இரண்டாவது நாளில் இருந்து அவர் சில தமிழ்பாடல்களை மீண்டும் ஒலிக்கச்செய்யும்படி கேட்டார். அதனை தன் கைப்பேசிக்கு புளுடூத் மூலம் தரவிறக்கம் செய்து கொண்டார்.
எனது தொகுப்பில் டி. ராஜேந்தர் அவர்களின் மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலையை தூது விட்டேன் என்ற பாடல் இருந்தது. அந்த பாடலைக் கேட்ட பீகார் நண்பர், சொக்கிப்போனார். மூன்றாவது நாளிலிருந்து இன்று வரை அவர் இளையராஜாவின் ”தேவன் தந்த வீணை” “தேவன் கோவில் தீபம் ஒன்று” மற்றும் டி.ஆரின். ”மூங்கிலிலே பாட்டிசைக்கும்” ஆகிய பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்டு இப்போது பாடி வருகிறார்.
அடிக்கடி போன் செய்து அந்த பாடல்களை பாடிக்காட்டுவார். தில்லியி்ல் என் வீட்டிற்கு வந்து என்னிடம் இருந்த தமிழ்பாடல்கள் தொகுப்பு அனைத்தையும் தனது லேப்டாப்பில் தரவிறக்கம் செய்து போனபோது நான் அடைந்த வியப்பை விவரிக்க இயலாது.
No comments:
Post a Comment