Monday, October 11, 2010

வெளியே தெரியாத உண்மையான வீரர்கள்!!!


பணி சார்ந்த பயிற்சியின் ஒரு பிரிவாக விசாகப்பட்டினத்தில் கிழக்கு கடற்படை கமாண்ட் கப்பலணியின் கீழ் இருந்து இயங்கும் நீர்மூழ்கிக்கப்பல் ஒன்றிற்கு அழைத்துச்செல்லப்பட்டோம். இந்தியாவின் பெரும்பான்மையான இராணுவ தளவாடங்கள் சோவியத் ரஷ்யாவிலிருந்து பெறப்பட்டவை. அது போல் நமது கடற்படையில் உள்ள நீர்மூழ்கிக்கப்பல்களும் ரஷ்யாவிடமிருந்து பெறப்பட்டவை. பிரான்சிடமிருந்து அனுமதிபெற்று 6 நீர்மூழ்கிக்கப்பல்களை கட்டி வருகிறோம்.
நீர்மூழ்கிக்கப்பல்கள் ஒரு நாட்டின் கடற்படைக்கு இன்றியமையாதவை. யாருக்கும் தெரியாமல் எதிரிநாட்டின் நிலை மீதோ, கப்பல் மீதோ டோர்பீடோ எனப்படும் குண்டுகளை வீசி அழிக்கும் ஆற்றல் இருப்பதால் நீர்மூழ்கிக்கப்பல்கள் இன்றியமையாதவை.
நீர்மூழ்கிக்கப்பல் என்றால், அவை கடலுக்குள் வெகு ஆழத்தில் இருந்து இயங்கும் என்று பொருள் அல்ல. அதிக பட்சம் 100 மீட்டர் ஆழத்தில் தான் இயங்க முடியும். ஆழம் செல்ல செல்ல தண்ணீரின் அழுத்தம் அதிகரிக்கும் நீர்மூழ்கிக்கப்பல் அழுத்தத்தில் பாதிக்கப்படக்கூடும் என்பதால் நீர்மூழ்கிக்கப்பல்கள் ஆழத்திற்குள் செல்ல இயலாது.
தண்ணீரில் செல்லும் நீர்மூழ்கிக்கப்பல்கள் ஒலி எதிரொலிமானியின் உதவியுடன் (SONAR) உதவியுடன் செயல்படுகின்றன.

நீர்மூழ்கிக்கப்பல் என்றால் ஓர் காற்றுப்புகாத உலோக உருளை. அவ்வளவு தான். அந்த உருளைக்குள் நீர் செலுத்தப்படும்போது கீழே மூழ்குகிறது. நீர் வெளியேற்றப்படும் போது வெளியே வருகிறது. மற்றபடி இந்த நீர்மூழ்கிக்கப்பலை எடையற்ற தன்மையில் (நியூட்ரலில்) பராமரிக்கிறார்கள். ஆகவே இது அப்படியே மூழ்காது.
முன்னும் பின்னும் செல்வது மற்ற கப்பல்களில் இருப்பது போன்று சுழல் இறகுகள் பயன்படுகின்றன. இவை பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்த செய்தி தான். ஆனால் நாங்கள் ஒரு நீர்மூழ்கிக்கப்பலின் உள்ளே சென்ற போது தான் வெளியே தெரியாத பல நுட்பங்கள் தெரிந்தன. தேசத்தின் பாதுகாப்பு கருதி, நீர்மூழ்கிக்கப்பலின் பெயர் மற்றும் முக்கிய தகவல்களை வெளியிட இயலாது. இந்த தகவல்கள் இணையதளத்தில் கிடைக்கின்றன என்பது வேறு விஷயம்.

இந்தியாவில் இருக்கும் நீர்மூழ்கிக்கப்பல்கள் எல்லாம் அவற்றின் அளவு மற்றும் ஆற்றல்களை வைத்து 4 பிரிவாக பிரிக்கலாம். ஃபாக்ஸ்டிராட், ஷிஷூமர், கிலோ மற்றும் அகுலா ரகம் என்று வகைப்படுத்தலாம். இதில் பாக்ஸ்டிராட் வகை நீர்மூழ்கிக்கப்பல்கள் 1970 களில் பெறப்பட்டவை. ஓரிரண்டு தான் படையில் இருக்கின்றன. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் படைவிலக்கம் செய்யப்பட உள்ளன.
ஷிஷூமர் ரக நீர் மூழ்கிக்கப்பல்கள் ஷிஷூமர், ஷங்க்குஷ் என்பன போன்றும் கிலோ ரக நீர்மூழ்கிக்கப்பல்கள் சிந்து என்ற பெயர் தொடக்கத்தில் சிந்துகோஷ், சிந்துவீர் போன்றும் பெயரிடப்பட்டு உள்ளன. (இதன் மூலம் அடையாளம் காண்பது எளிது என்பது தான்).

இவை தவிர, இந்தியா பிரான்சிடம் இருந்து 6 ஸ்கார்பீன் நீர்மூழ்கிக்கப்பல்களை வாங்குகிறது. இவை இந்தியாவில் மும்பையில் உள்ள மாசகோன் டாக்ஸ் லிமிடட் நிறுவனத்தில் கட்டப்படுகின்றன.
அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து கடற்படைகள் அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக்கப்பல்களை மட்டுமே இயக்குகின்றன. அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக்கப்பல்கள் நீண்ட காலம் கடலில் இருக்கலாம் என்பதால் அதற்கு மவுசு அதிகம். ஆனால் அதன் தொழில் நுட்பம் ரகசியமாக வைக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவும் 6 அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக்கப்பல்களை கட்டுகிறது. அட்வான்ஸ்டு டெக்னாலஜி வெசல் என்று பெயரிடப்பட்ட இந்த நீர்மூழ்கிக்கப்பல்கள் கட்டும் திட்டம் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.
முதலாவது கப்பல் கட்டுமானப்பணி கடந்த ஆண்டு முடிவடைந்தபோதும், பிரதமர் (சடங்குப்படி அவர் மனைவி) இந்த கப்பலை தொடங்கிவைத்தபோதும் இந்த கப்பல் எப்படி இருக்கும் என்று இது வரை அறிவிக்கப்படவில்லை.
நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்தபோதும் கடற்படை அதிகாரிகளும், கப்பல்கட்டும் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் இறுக்கமாகவே வாயை மூடிக்கொண்டார்கள்.

நீர்மூழ்கிக்கப்பல்கள் ஒலி எதிரொலி அடிப்படையில் இயங்கும் என்று முன்னரே குறிப்பிட்டு இருந்தேன். ஆனால் உண்மையில், நீர்மூழ்கிக்கப்பல், அமைதியாக இருந்தால் தான் எதிரியிடமிருந்து தப்பிக்க முடியும். கப்பல் வெளியிடும் சோனார் அதிர்வலை அதனைக் காட்டிக்கொடுத்துவிடும். கடலில் நீர்மூழ்கிக்கப்பலை கண்டுபிடித்துவிட்டால் அதனை அழிப்பது எளிது. நீர்மூழ்கிக்கப்பல் இருக்கிறதா என்பதை கண்டறிய கப்பல்களில் இருந்தோ ஹெலிகாப்டர் மூலமாகவோ சோனார் மூலம் ஒலி அனுப்பப்பட்டு கண்டறியப்படும்.
கண்டுபிடித்துவிட்டால் அழிப்பது எளிது.
எனவே நீர்மூழ்கிக்கப்பலைப் பொருத்தவரை அமைதியாக இருப்பதே சிறந்தது. இந்திய கடல் பகுதியின் நீர் நிலைகள் நன்கு ஆவணப்படுத்தப்பட்டு வி்ட்டதால் இந்திய கடல் எல்லையில் அவர்கள் பயணிப்பதற்கு பயமில்லை. வெளியே செல்லும் போது தான் பிரச்சினை.
ஒரு கப்பலில் 45 முதல் 65 ஊழியர்கள் வரை அவசியம தேவைப்படுகிறது.
நீர்மூழ்கிக்கப்பல் கடலில் மூழ்குவதற்குள் துறைமுகத்தில் இருந்து 25 கடல் மைல்கள் செல்ல வேண்டும். ஒரு முறை அவர்கள் பயணம் தொடங்கினால் குறைந்தது 45 நாட்கள் திரும்ப இயலாது.
அமைதிக்காலங்களில் அவர்கள் தகவல் பரிமாறி்க் கொள்ளலாம்.

ஆனால் போர்க்காலங்களில், நீர்மூழ்கிக்கப்பல்கள் எந்த பணிக்காக அனுப்பப்படுகிறதோ, அந்த பணியை நிறைவேற்றிவிட்டு திரும்பும் வரை தொடர்பு கொள்ள முடியாது.
கூடாது.

கடலுக்குள் பயணிக்கும் போது வீரர்கள் முகச்சவரம் செய்யக்கூடாது,
குளிக்கக்கூடாது. (குறைந்த அளவு தண்ணீர் தான் உள்ளே இருக்கும் என்பதால் இந்த விதி). இதன் காரணமாக அவர்கள் அணியும் உடையும் மூன்று நாட்கள் அணிய வேண்டும். உள்ளாடைகள் கூடாது.

மூன்று நாளுக்கு பிறகு அந்த உடையை தூக்கி எறிந்துவிடவேண்டியது தான். நீர்மூழ்கிக்கப்பல் பணியாளர்களுக்கென பிரத்யேகமாக தயாரிக்கப்படுகிறது.


உள்ளே, அதிகாரி, சிப்பாய் வேறு பாடுகிடையாது. எல்லோரும் ஒன்றுதான். கப்பலின் கேப்டனும் சராசரி ஊழியர் தான். ஆனால் அவர் வழங்கும் உத்தரவுகள் வரிவிடாமல் வரிசையாக பதிவு செய்யப்படுகின்றன.
எழுதப்படுவது அனைத்தும் பென்சிலால்.
(ஒருவேளை கப்பல் மூழ்கிவிட்டால் எழுத்து அழியாது, என்ன தவறு நடந்தது என்று தெரிந்து கொள்ளலாம்). பென்சில் சீவுவதற்கென்றே பல கருவிகள் இருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

நம் நீர்மூழ்கிக்கப்பல்கள் டீசல் என்ஜினால் இயங்குகின்றன. நீருக்கடியில் என்ஜின் இயங்க ஆக்சிஜன் தேவை என்பதால், நீர்மூழ்கிக்கப்பல் தலையை நீ்ட்டி இயங்கி ராட்சத பேட்டரிகளை சார்ஜ் செய்கிறது. பின்னர் இந்த பேட்டரியின் சக்தியில் தான் இயங்குகின்றன. ஒலி அதிர்வுகளை கப்பலின் உலோகம் எதிரொலிக்கும் என்பதால், கப்பல் முழுவதும் கருப்பு ரப்பர் ஷீட்டுகளால் போர்த்தப்பட்டு உள்ளது. எங்களுக்காக கப்பலை காற்றழுத்தம் இல்லாத நிலைக்கு கொண்டு வந்து காட்டினார்கள். முன்னெச்சரிக்கையாக
எங்களுடைய வாய் தாடைகளை அசைக்கும் படி கூறினார்கள்.

கப்பலுக்குள் உள்ள காற்று அனைத்தும் வெளியேற்றப்பட்டதும் வெற்றிட அழுத்தம் எவ்வளவு நேரம் நிற்கிறது என்று பார்க்கிறார்கள். வெற்றிட அழுத்தம் குறைந்தால் உடனே அது எங்கிருந்து ஏற்படுகிறது என்று பார்க்கிறார்கள். இது மிகவும் அவசியம். கடலுக்குள் காற்றுப்புகாத அளவு இறுக்கமாக கப்பலின் துவாரங்கள் மூடப்பட்டால் தான் கடல் நீர் கசியாமல் தவிர்க்க முடியும்.

சில விநாடிகளில் கப்பல் முழுவதும் வெற்றிடமாக்கபட்டது. எங்களுக்கு மூச்சு அடைத்துக்கொள்ளும் நிலைதான்.
வெற்றிட அழுத்தம் குறைவாக இருப்பதாக கண்காணிப்பு அதிகாரி கேப்டனுக்கு தெரிவித்தார். உடனே அவர் அடுத்தடுத்து உத்தரவுகள் பிறப்பித்தார்.

கேப்டன் வெளியிடும் உத்தரவுகள், உடனடியாக சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு மைக்மூலம் அனுப்பப்பட்டன. சிறிது நேரத்தில் காற்று உள்ளே வரும் ஓட்டை அடைக்கப்பட்டது.

நீர்மூழ்கிக்கப்பலில் இரண்டு பெரிஸ்கோப்புகள் உள்ளன. ஒன்று கேப்டனுக்கு, இன்னொன்று வழித்தடம் அறியும் அதிகாரிக்கு.
இருவரும் பார்த்து முடிவு செய்வார்கள். பெரிஸ்கோப் சில அடி உயரம் மட்டுமே உயரும். கடல் மட்டத்தில் இருந்து அதிக பட்சம் 2 அடி உயரத்தில் இருந்த வாறு 360 டிகிரி சுற்றிப்பார்த்து என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து. எதிரி தென்பட்டாலோ, வேறு கப்பல்கள் தென்பட்டாலோ நொடிப்போழுதில் அடியில் சென்றுவிடுவார்கள்.

நீர்மூழ்கிக்கப்பலில் உள்ள ஒலி வழித்தட வீரர்கள், சுற்றும் முற்றும் ஏற்படும் ஒலியை மட்டுமே கேட்டுக்கொண்டு பயணிப்பார்கள். ஷிப்டு முறையில் 3 முதல் 4 பேர் ஒரு நேரத்தில் இந்த பணியில் ஈடுபடுவார்கள். அருகில் செல்லும் கப்பல் மற்றும் படகுகளில் புரோபலர்கள் வெளியிடும் அதிர்வலை இரைச்சலை வைத்து அந்த ஒலியை எழுப்புவது கப்பலா, அல்லது படகா என்று அவர்களால் துல்லியமாக கண்டறிய முடியும்.

நீர் மூழ்கிக்கப்பலில் மூன்று அல்லது நான்கு துவாரங்கள் உள்ளன. அசம்பாவிதங்கள் ஏற்படும்போது அவர்களை மீட்க இவை உதவும். மீட்பு படை வரும் வரை காத்திருக்க வேண்டியது தான். அவசர காலத்திற்கு என பல இடங்களில் அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் குடிநீர் வைத்துள்ளனர்.

நாங்கள் அங்கு இரண்டு மணிநேரம் இருந்தோம். அதற்குள் மூச்சு முட்டி, வியர்த்து எப்போது வெளியே வருவோம் என்று எண்ண வைத்தது. நீர்மூழ்கிக்கப்பலுக்குள் எங்கு பார்த்தாலும் திருக்குகள். எங்களுக்கு வழங்கப்பட்ட முக்கிய அறிவுரை. நீங்கள் எந்த கருவியைப்பார்த்தாலும், அது எவ்வளவு கவர்ச்சிகரமாக இருந்தாலும் கைவைக்காதீர்கள் என்பது தான்.
நடப்பதற்கோ நிற்பதற்கோ கூட இடம் கிடையாது. படுப்பதும் உண்பதும் ஒடுகலான இடத்தில் தான். என்ன நடந்தாலும் உள்ளேயே இருக்க வேண்டும். வெளியே வரமுடியாது. (அத்தியாவசியமான சூழ்நிலை ஏற்பட்டால் தவிர). அவர்களுக்கு பொழுது போக்கும் மிகக் குறைவே. நீர்மூழ்கிக்கப்பல் ஊழியர்களுக்கு அதிகம் மன அழுத்தக் கோளாறு தான் ஏற்படுவதாக அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

படைவிலக்கப்பட்ட ஃபாக்ஸ்டிராட் ரக நீர்மூழ்கிக்கப்பல் ஐ.என்.எஸ். குர்சுரா விசாகப்பட்டினத்தில் கடற்கரையோரம் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது. விசாக்கப்பட்டினத்திற்கு சென்று அவசியம் இதனைப்பார்த்து வரலாம்.

இந்திய கடற்படையின் ஒரு பிரிவாக இந்த நீர்மூழ்கிக்கப்பல் பிரிவுகள் செயல்பட்டாலும், அதிகம் அறியப்படாத பிரிவாகவே இருக்கின்றன. அதன் வீரர்களும் வெளியே அதிகம் அறியப்படாத வீரர்கள் என்றால் அதில் எந்த சந்தேகமும் இல்லை.

1 comment:

Siva Ranjan said...

அருமை அருமை.... :)

Post a Comment