“உண்மையான வீரன் மறைவதில்லை”. இந்தக் கூற்று இந்திய இராணுவத்தைப் பொருத்தவரையில் ஹர்பஜன் சிங்கிற்கு பொருந்தும்.
சிக்கிமில் அமைந்துள்ள சீன எல்லையான நாது லா (லா என்றால் கணவாய்) என்ற இடத்தைக்காண (14200 அடி) நாங்கள் புறப்பட்ட போது, எங்களை அழைத்துச்செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இராணுவ ஜிப்சியின் டேஷ்போர்டில் ஒரு சீக்கிய இராணுவ வீர்ர் படம் வைக்கப்பட்டிருந்த்து. சிக்கிமிலிருந்த ஒவ்வொரு இராணுவ வாகனத்திலும் இந்த படம் இருந்தது. இந்த படம் ஓர் வழிபாட்டு இடத்திலிருந்து படம்பிடிக்கப்பட்டதாக இருந்த்து. இது யார் படம் என்று ஜிப்சியை ஓட்டிய ஹவில்தாரிடம் கேட்டேன். உடனே அவர், இது பாபா ஹர்பஜன் சிங்கின் படம் என்றார். பாபா ஹர்பஜன் சிங் பற்றி ஏற்கனவே சிறிது கேள்விப்பட்டிருந்த்தால் அவரைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள ஆர்வத்துடன் அவரிடமே வினவினேன்.
ஹர்பஜன் சிங் பஞ்சாபில் 1941ம் ஆண்டு பிறந்தவர். இராணுவத்தில் பஞ்சாப் ரெஜிமென்ட்டின் 23வது பட்டாலியனில் சேர்ந்தார். 1968ல் சிக்கிமில் நாதுலா எல்லையில் படையமர்த்தப்பட்டார். இந்த காலகட்டத்தில் நாதுலாவில் அடிக்கடி எல்லைச்சண்டைகள் நடைபெற்று வந்த நேரம். இருநாட்டு வீரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு வந்த நேரம். 1968 அக்டோபர் 4ந்தேதி கோவேறு கழுதைகள் தொகுதி ஒன்றுடன் பட்டாலியன் தலைமையகத்திலிருந்து சென்றபோது மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டார். அவரது உடலை தேடினார்கள். உடல் கிடைக்கவில்லை. அவர் படையிலிருந்து ஓடிவிட்டார் என்ற செய்தியும் பரவியது. வீரர் ஒருவர் கனவில் தோன்றிய ஹர்பஜன், தன்னுடைய ஆயுதங்கள் இந்த இடத்தில் இருக்கிறது, தன்னுடைய உடல் இந்த இடத்தில் கிடக்கிறது என்றும் சொல்லியிருக்கிறார். இதனை அந்த வீரர் உதாசீனப்படுத்தியுள்ளார். ஹர்பஜன் சிங் காணாமல் போய் 4 நாட்கள் கழித்து அவர் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இராணுவ மரியாதயுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. (அப்போதைய வழக்கப்படி, இறந்த வீர்ரின் உடல் அங்கேயே அடக்கம் செய்யப்படும். அவருடைய சீருடை மட்டுமே குடும்பத்தினருக்கு அனுப்பி வைக்கப்படும்)
ஹர்பஜன் உடல் கண்டெடுக்கப்பட்ட இடம் வீரரின் கனவில் வந்து தெரிவித்த இடம் என்பதால் பட்டாலியன் வீர்ர்கள் ஒவ்வொருவருக்கும் ஹர்பஜன் மீது மரியாதை வரத்தொடங்கியுள்ளது. அவ்வப்ப்போது அவர் வீரர்கள் கனவில் வந்து, “நான் உங்களைக்காப்பாற்றுகிறேன்” “உங்களுக்காக எல்லையில் காவல்காக்கிறேன்” “சீனா இந்தியா மீது படையெடுத்தாலோ பிரச்சினை எழுப்பமுயன்றாலோ மூன்று நாளுக்கு முன் எச்சரிக்கிறேன்” என்று கூறிவந்துள்ளார். இரவில் வெள்ளைஉடை அணிந்த ஒருவர் குதிரையில் ரோந்துப்பணியில் சுற்றுவதாக சீனர்கள் பலமுறைத் தெரிவித்து உள்ளனர். இதனால் ஹர்பஜன் மீது பயம் கலந்த பக்தி ஏற்பட்டது. வீர்ர்கள் நாது லாவில் அவருக்கென ஆலயம் ஏற்படுத்தி வழிபடத்தொடங்கினர். சீனர்களும் ஹர்பஜன் மீது மரியாதை வைத்துள்ளனர். அங்கும் அவருக்கு வழிபாடு நடத்துகின்றனர். அந்த வழிபாட்டுத் தலத்தில் மூன்று அறைகள் உள்ளன. அதில் ஒரு அறையில் அவர் படம் மாட்டப்பட்டு கோவில் போன்றே பூஜைகளுடன் வழிபடப்படுகிறது. மற்றொரு அறை அவருடைய பொருட்கள் வைக்கப்பட்டு உள்ளது. தினமும் அவருடைய பூட்ஸ் பாலிஷ் செய்து வைக்கப்படும். படுக்கைவிரிப்பு நன்கு விரித்துவைக்கப்படும். காலையில், அவருடைய பூட்ஸ் மண்ணாகி தென்படும் என்றும் வீரர்கள் கூறுகின்றனர்.
ஹர்பஜன் சிங் கட்டுப்பாடு நிறைந்தவர். இரவு காவலில் இருக்கும் ஏதேனும் வீரர் கண் அயர்ந்து உறங்கிவிட்டால் அவர் கன்னத்தில் ஹர்பஜன் சிங் அறைவதுண்டு என்று வீர்ர்கள் மத்தியில் நம்பிக்கை இன்றும் நிலவுகிறது. தங்கள் மத்தியில் இன்னும் உயிரோடு இருப்பதாக வீர்ர்கள் நினைத்த்தால் அவர் இறந்ததைப்பதிவு செய்யவில்லை. அவருக்கு இராணுவம் தொடர்ந்து சம்பளத்தை வழங்கியது. அவர் திருமணம் செய்யாத்தால் அவரது தாயாருக்கு அவரது சம்பளத்தை அனுப்பி வைத்தது. (ஹர்பஜன் உடல் மீட்கப்படவில்லை, எனவே அவர் இறந்ததாக பதிவு செய்யமுடியாது, அவர் இறந்ததாக அறிவிக்க முடியாத நிலையில் அவருக்கான சம்பளத்தை வழங்குவது என்று இராணுவம் வழங்கியதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது).
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14ந்தேதி அவர் பெயரில் அமிர்தசரஸ் செல்லும் ரெயிலில் பஞ்சாப் மாநிலம் கபுர்தாலாவில் உள்ள அவர் கிராமத்திற்கு அவருக்கு என டிக்கெட் பதிவு செய்யப்படும். அவருடைய இருக்கைக்கு கீழ் அவருடைய பெட்டி வைக்கப்படும். ரெயில் படுக்கையில் அவருடைய படுக்கை விரிக்கப்படும். அவருக்கு துணையாக 3 வீர்ர்களும் உடன் சென்று அவருடைய குடும்பத்தினரிடம் இந்த பெட்டியை ஒப்படைப்பார்கள். பின்னர் 2 மாதங்கள் கழித்து அவர்கள் அந்த பெட்டியை வாங்கிக்கொண்டு நாது லா திரும்புவார்கள். இந்த வழக்கம் மிகச்சமீபம் வரை நடைபெற்றது. இராணுவத்தின் இந்த நடவடிக்கை பலதரப்பில் இருந்து விமர்சனத்திற்கு ஆளானது. பஞ்சாபை சேர்ந்த முன்னாள் படைவீரர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த்தைத்தொடர்ந்து, இந்திய இராணுவம் சத்தமில்லாமல் ஹர்பஜன் சிங்கிற்கு ஓய்வு கொடுத்திருந்த்து. இதற்குள்ளாக இவருக்கு கவுரவ கேப்டன் பதவியும், பின்னர் கவுரவ மேஜர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு மகாவீர் சக்கரா விருதும் வழங்கப்பட்டுள்ளது. நாதுலாவில் உள்ள போர்நினைவிடத்தில் முதலாவது பெயர் ஹர்பஜன் சிங் பெயர் தான் பொறிக்கப்பட்டுள்ளது.
இராணுவம் விடுவித்தாலும், ஹர்பஜன் சிங் பாபா ஹர்பஜன் சிங்காக வீரர்களால் போற்றப்படுவதால், எல்லைப்புற சாலைகள் அமைப்பின் துணை அமைப்பான கிரெப் (GREF) ஹர்பஜன் சிங்கிற்கு மறுவேலை வழங்கியுள்ளது. இப்போது கிரெப் ஊழியராக அவர் வருடத்திற்கு 2 மாத விடுப்பில் சொந்த ஊருக்கு சென்று வருகிறார். நாதுலாவில் உள்ள அவர் கோவிலில் வரும் வருமானத்தில் ஒரு பகுதி அவருடைய குடும்பத்திற்கு அனுப்பப்படுகிறது.
பாபா ஹர்பஜன் சிங் பெட்டி படுக்கைகள் ஊருக்கு வரும்போது அவர் கிராமத்தில் விழா எடுக்கிறார்கள். இந்தியா சீனா எல்லைப்பகுதி வீர்ர்கள் சந்திப்பின் போது ஹர்பஜன் சிங்கிற்கு ஒரு இருக்கையை சீனர்கள் ஒதுக்குவதாகவும் சொல்கிறார்கள்.
ஹர்பஜன் சொல்லை மீறி செயல் பட எந்த படைவீரரும் தயாராக இல்லை. நாதுலா மட்டும் அல்ல, வடக்கு சிக்கிமில் நாங்கள் சென்ற இராணுவ நிலையில், வீரர்கள் படுத்துறங்கும் கூடாரத்திற்கு வெளியே ஒரு சிறு விளக்கு எரிந்து கொண்டிருந்த்தைக் கண்டு இது என்ன என்று கேட்ட போது, இது பாபா ஹர்பஜனுக்காக என்று கூறினார்கள்.
பாபா ஹர்பஜன் சிங் எல்லையில் காவல் புரியும் வீரர்களுக்கு காவல் தெய்வமாகவே இருக்கிறார்.
4 comments:
real are real. dis s news for us. long live? ஹர்பஜன் சிங்
:)
அற்புதம்!
நிஜமாகவே உண்மையான வீரன் மறைவதில்லை.
உண்மைதான். நானும் நாது ளா சென்று அவரது கோவிலில் தரிசித்திருக்கிறேன். அவர் இன்னும் நம் நாட்டுக்காகவும் இந்திய ராணுவத்திற்காகவும் ஏராளமான சாதனைகளைச் செய்துகொண்டிருக்கிறார்.
Post a Comment