கிழக்கு கடற்படைக் கமாண்டின் கட்டுப்பாட்டில் இயங்கும் போர்க்கப்பல் ஒன்றில் கடலில் பயணம் செய்யும் அரிய வாய்ப்பு கிடைத்தது. என்னுடன் சேர்த்து 31 பேர் இந்த பயிற்சி பயணத்தை மேற்கொண்டோம். எங்களுக்கு முன்தினம் அளிக்கப்பட்ட அறிவுரை, குமட்டல் ஏற்படக்கூடிய, வாயிலெடுக்கக்கூடிய எண்ணையில் தயாரிக்கப்பட்ட பொருட்களை அதிகம் சிற்றுண்டியில் உண்ணவேண்டாம் என்பது தான்.
இனி, இந்தப்பயணத்தின் மூலம் கிடைத்த அனுபவ அறிவின் தொகுப்பு-
கப்பலுக்கும் படகுக்கும் உள்ள வித்தியாசம் அனைவருக்கும் தெரிந்தது தான். உருவத்தை வைத்து இதனை தரம் பிரிக்கலாம். ஆங்கிலத்தில் Vessel என்று கப்பல்கள் அழைக்கப்படுவதும், தமிழில் கலம் என்ற பொருளும் இருப்பது காரணப்பெயர்கள். தண்ணீரில் மிதக்கும் பாத்திரம் போன்றே இந்த கப்பல்கள் உள்ளன.
இந்தியக்கடற்படையில் உள்ள கப்பல்கள் பல வகைப்படும். தற்போது ஒரு விமானந்தாங்கிக்கப்பலும், தரை மற்றும் கடலில் நடவடிக்கைகளுக்கு உதவும் கப்பலும், எரிபொருள் ஏற்றிச்செல்லும் கப்பலும், ஏவுகணை மற்றும் ஏவுகணை உள்ளிட்ட ஆயுதங்களை தாங்கிச்செல்லும் நாசகாரிக்கப்பல்களும், பாய்மரக்கப்பலும், சிறு இயந்திரப்படகுகளும் (இதில் பல வகைகள் உள்ளன) நம் படைக்கொட்டிலை அலங்கரிக்கின்றன. இந்தியாவின் பரப்பு காரணமாக கடற்படை கிழக்கு மேற்கு மற்றும் தெற்கு என மூன்றாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. முன்பு அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு என தனி கமாண்ட் இருந்தது. சுனாமிக்குப்பின், அந்தமான் நிகோபார் முப்படைகளையும் உள்ளடக்கிய கூட்டுக்கமாண்டாக நிர்வாக எளிமைக்காக மாற்றப்பட்டுள்ளது.
நமது கடற்படைக்கு சொந்தமான கப்பல்கள் பாதுகாப்பு அச்சுறுத்தல்களின் அடிப்படையில் மூன்று கமாண்டுகளுக்கும் பிரித்து வழங்கப்பட்டுள்ளன.
தென்னிந்தியா, குறிப்பாக தமிழகம் மன்னர்கள் காலத்திலேயே கடற்படையைக்கொண்டு இருந்தது வரலாறு. இவ்வளவு தொன்மையான வரலாறு இருந்த போதும், நமது கடற்படை அதிகார வர்க்கத்தால் மிகவும் தாமதமாக உணரப்பட்ட படையாகவே காட்சி அளிக்கிறது. 80களைச்சுற்றிய 20 ஆண்டுகளில் பாதுகாப்பு பட்ஜெட்டுகளில் கடற்படையின் படைக்கலன்களை அதிகரிக்கத் தேவையான கொள்கை முடிவுகள் எடுக்கப்படாததன் காரணமாக நம் கப்பல்களின் எண்ணிக்கைகள் பெருமளவு குறைந்தன.
திடீரென விழித்துக்கொண்ட அரசு, கப்பல்களை கட்டுவதற்கு மளமளவென உத்தரவுகள் பிறப்பித்தது. தொழில் நுட்பப்பற்றாக்குறை காரணமாக நமது கப்பல் கட்டும் தளங்களில் தேக்க நிலை இருந்தது. இருப்பினும், நாம் இப்போது ஏராளமான கப்பல்களை நமது கப்பல் கட்டும் தளங்களில் இருந்து கட்டப்பட்டு வருகின்றன.
கொச்சி கப்பல்கட்டும் நிறுவனத்தில் தற்போது, விமானந்தாங்கிக்கப்பல் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. 2014- 2015ம் ஆண்டிற்குள் கப்பல் கட்டப்பட்டு படைசேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கப்பல் 2010ல் படை சேர்க்கப்பட இருந்தது. ஆனால், இந்த கப்பல்கட்டுவதற்கு ஏற்ற உருக்கினை ரஷ்யாவால் வழங்க முடியாததால் தாமதம் ஏற்பட்டது. ஸ்டீல் அதாரிட்டி ஆப் இந்தியா லிமிடட் நிறுவனம் இப்போது இந்த உருக்கினை தயாரித்து வழங்குகிறது. இந்த கப்பல் முழுவதுமாக கட்டப்பட்ட நிலையில் கடலுக்குள் செலுத்தும் வசதி இல்லாததால், ஓரளவு கட்டப்பட்ட நிலையில் கடலில் செலுத்தப்பட்டு பின்னர் மற்ற வேலைகள் முடிக்கப்படும்.
இந்த கப்பலின் கட்டுமான செலவு சுமார் ரூ. 36000 கோடி. இந்த கப்பலின் கட்டுமானப்பணிகள் ஓரளவு திருப்தி அளிக்கும் வகையில் அமைந்ததால், பாதி கப்பல் கட்டப்பட்ட நிலையிலேயே அடுத்த கப்பல் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படும். மொத்தம் 3 விமானந்தாங்கிக்கப்பல்கள் இந்தியாவால் கட்டப்படும். இந்த 3வது கப்பல் 2017க்குள் படை சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இந்த தேதி தள்ளிப்போகலாம். இதற்குள் தற்போது இயங்கிக் கொண்டு இருக்கும் ஒரே ஒரு விமானந்தாங்கிக்கப்பலான ஐ.என்.எஸ். விராட் (இங்கிலாந்தில் இருந்து பெறப்பட்டது) முற்றிலும் வயதாகி, படைவிலக்கப்பட்டுவிடும்.
இதற்கு இடைப்பட்ட காலத்தில் ரஷ்யாவிடமிருந்து வாங்கியுள்ள கோர்ஷ்கோவ் என்ற விமானந்தாங்கிக் கப்பல் புதுப்பிக்கப்பட்டு ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா என்ற பெயரில் 2012க்குள் இந்திய படைசேர்க்கப்பட்டுவிடும். கோர்ஷ்கோவ் கப்பலைச்சுற்றி பல்வேறு செய்திகள் வந்தவண்ணம் இருப்பதை நாம் அறிவோம். இந்தக்கப்பலைப் பொருத்தவரை, நாம் ஓரளவு ஏமாற்றப்பட்டோம் என்று சொல்லலாம். ஆனால் இந்திய பாதுகாப்புத்துறைக்கு ரஷ்யாவின் பங்களிப்பை கணக்கில் கொண்டோமெனில், இதை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது.
விஷயம் இதுதான். ரஷ்யா தன்னிடம் உள்ள விமானந்தாங்கிக்கப்பல் கோர்ஷ்கோவை படைவிலக்கம் செய்தது. அந்த நேரம் ரஷ்யாவின் பொருளாதாரம் மிகவும் நலிவடைந்திருந்தது. திவாலாகிப் போகக்கூடிய நிலையில் இருந்தது என்று கூட சொல்லலாம். அப்போது ரஷ்யா இந்தியாவை அணுகி, நாங்கள் இந்தக் கப்பலை உங்களுக்கு இலவசமாக தருகிறோம். ஆனால் இந்த கப்பலை நீங்கள் அப்படியே பயன்படுத்த முடியாது. இதனை சீரமைக்க வேண்டும். இதற்கு நீங்கள் 500 மில்லியன் டாலர் தரவேண்டும் என்று கூறியது. இந்தியாவும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தது. பணம் வழங்கப்பட்டது, பாதி வேலை முடிந்தபோது, இந்த சீரமைப்பு செலவு அதிகமாகிறது. மேலும் 500 மில்லியன் டாலர் வேண்டும் என்று ரஷ்யா கூறியது. இதற்கு லேசாக எதிர்ப்பு தெரிவித்தாலும், இந்தியா சம்மதித்தது.
இந்த கப்பலை சீரமைக்கும் பணி தொடங்குவதற்கு முன்னால், கப்பலை மதிப்பிடச்சென்ற இந்திய அதிகாரிகள், ரஷ்ய கப்பல் கட்டும் தளத்தில் வேலை ஏதும் இன்றி தொழிலாளர்கள் கூடாரங்களில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்டிருக்கிறார்கள். இந்தியாவின் பணம் போனதும் அவர்கள் நிலையில் முன்னேற்றம் அடைந்தது. இந்த காலகட்டத்தில் பெட்ரோல் விலை உலகெங்கும் அதிகரித்தது, ரஷ்யாவின் எண்ணைக்கிணறுகளின் மதிப்பு கூடியது. ரஷ்யாவின் பொருளாதாரம் சீரடைந்தது. இதனால், இந்தியாவை கெஞ்சிய நிலை மாறியது. இந்தியாவிடம் இருந்து மேலும் பணம் கேட்டு மிரட்டியது. இந்தியாவிற்கு இப்போது வேறு வழியில்லை. மேலும் பல விஷயங்களைக் கருத்தில் கொண்டு, ரஷ்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இப்போது 2பில்லியன் 300 மில்லியன் டாலர் வழங்க இந்தியா சம்மதித்துள்ளது. இந்தத் தொகை மேலும் அதிகரிக்கலாம். கப்பல் நம்மிடம் வந்து சேர்ந்த பின்னர் தான் மொத்த செலவை கணக்கில் கொள்ள முடியும். இந்த கப்பலுடன் மிக் 29 கே விமானங்களையும், கோமோவ் ஹெலிகாப்டர்களையும் ரஷ்யா வழங்குகிறது.
நாங்கள் சென்ற போர்க்கப்பல் ராஜ்புத் வகைக்கப்பல் ஆகும். இந்த கப்பல் முந்தைய சோவியத் யூனியனில் 1980களில் கட்டப்பட்டது. மொத்தம் 5 கப்பல்கள் கட்டப்பட்டு வழங்கப்பட்டன. இவை அங்கு கஷின் வகை கப்பல்கள் என அழைக்கப்பட்டன. இந்திய கடற்படைக்கென சில மாற்றங்களைச் செய்து, அடையாளம் காண்பதற்கு வசதியாக ராஜ்புத் வகைக்கப்பல்கள் என அழைக்கப்பட்டன. ராஜ்புத், ராணா, ரண்விஜய், ரண்வீர், ரஞ்ஜித் என்று பெயரிடப்பட்டுள்ளன. ராடார் கருவிகள் மூலம் இந்த கப்பல்களை எளிதில் அடையாளம் காண முடியாத அளவு இதன் வடிவமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல், விமான எதிர்ப்பு, நீர்மூழ்கிக்கப்பல் எதிர்ப்பு, ஏவுகணை எதிர்ப்பு போன்ற பல்வேறு பணிகளில் பயன்படுத்தப்படக்கூடியது. இதற்கென ஏராளமான ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தக்கப்பலில் பிரம்மோஸ் ஏவுகணை பொருத்தப்பட்டுள்ளது. நாங்கள் பிரம்மோஸ் ஏவுகணையை நேரில் பார்த்தபோது எங்கள் உடலில் புல்லரித்ததை நன்கு உணர்ந்தேன்.
35 அதிகாரிகள் உள்பட சுமார் 230 பேர் இந்த கப்பலில் பணிபுரிகின்றனர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பணி. கயிறு எறிவது முதல், கப்பலை கரையில் உள்ள கம்பத்துடன் பிணைப்பது என அவரவர்க்கு இட்ட கட்டளைகள் அவரவர்கள் செய்கின்றனர். ஒயர்லெஸ் தொடர்பிற்கு என மட்டுமே பல பிரிவுகள் இருக்கின்றன. கப்பலின் கேப்டன் உத்தரவுகள் அதிவிரைவாக சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்படுகின்றன. கப்பல் இயங்குவது டீசலில். டீசல் எந்திரத்தில் இருந்து சுழல் விசிறிக்கு விசையை அனுப்பும் ஷாப்ட் பனை மரம் போல் இருக்கிறது. எந்திரத்தின் வேகம், கப்பலின் வேகம், காற்றின் வேகம் என்று கேப்டன் சம்பந்தப்பட்டவர்களைக் கேட்டறிகிறார். அவர்கள் கொடுக்கும் புள்ளிவிவரத்திற்கு ஏற்ப அவரது கட்டளைகள் பறக்கின்றன. கேப்டன் சொல்வது இம்மி பிசகாமல் நிறைவேற்றப்படுகின்றன. நீண்ட தொலைவில் இன்னொரு போர்க்கப்பல் சென்று கொண்டிருந்தது. அதன் கோணத்தைக்கண்ட கேப்டன், தன் உதவியாளரிடம், அந்த கப்பலின் திசை என்ன என்று கேள், அது செல்லும் திசை நம்மை ஒரு கட்டத்தில் மோதும் போல் இருக்கிறதே என்றார். உடனே அந்த கப்பலிடம் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு கேட்ட சிறிது நேரத்தில், அந்த கப்பல் தனது பாதையை சற்று மாற்றிக்கொண்டது.
எங்களுக்காக கப்பலில் ஹெலிகாப்டர் ஒன்று தரையிறக்கிக்காட்டப்பட்டது. இந்த ஹெலிகாப்டர் ரஷ்யர்களின் கண்டுபிடிப்பு. வால் பகுதி இறக்கை இல்லாது நீளம் குறைவாக தயாரிக்கப்பட்டது. வால் பகுதி இறக்கை இல்லாது ஹெலிகாப்டரைக் கட்டுப்படுத்த பிரத்யேகமாக எதிர் எதிர் திசையில் சுழலும் இறக்கைகளைக் கொண்டது. இந்த ஹெலிகாப்டரை ரகசியமாக கப்பலுக்குள் ஒளித்து வைக்க ரகசிய அறையும் உள்ளது. இந்த வகை கப்பல் முதலில் கட்டப்பட்டபோது, வேவு விமானங்கள் மூலம் அமெரிக்கா இந்த கப்பலை படம் பிடித்தது. பின்னர் திடீரென இதில் ஹெலிகாப்டர் தோன்றியபோது அமெரிக்காவே அதிர்ச்சி அடைந்தது வரலாறு.
எங்களுக்கென, நடுக்கடலில் அத்தியாவசியப்பொருள் நிரப்புவது போன்ற ஒத்திகை இன்னொரு போர்க்கப்பல் உதவியுடன் நடத்திக்காட்டப்பட்டது. இரு கப்பல்களுக்கும் இடையில் 40 மீட்டர் இடைவெளியை பராமரித்து இரு கப்பல்களும் கயிறு மூலம் இணைக்கப்பட்டு பரிவர்த்தனை நடத்தப்பட்ட விதமே இதில் உள்ள அபாயங்களை உணர்த்தி எங்களை அதிர வைத்தது. இரு கப்பல்களின் வீரர்கள் மிகத் துல்லியமாக ஒருங்கிணைந்து செயல்பட்ட விதம் எங்களை வியக்கவைத்தது.
கப்பலை மற்ற வாகனங்கள் போல் நினைத்த நேரத்தில் நிறுத்த முடியாது. 10 கிலோமீட்டர் தூரம் வரை சென்று நிற்கும் நிலையும் ஏற்படும் என்று கூறினார்கள்.
கப்பலில் உள்ள உயர் அதிகாரியின் பதவிக்கு ஏற்ப கப்பலில் கொடி பறக்க விடப்படுகிறது. அந்த கப்பலை கடந்து செல்லும் போர்க்கப்பல் இந்த கொடியை பார்த்து, தங்கள் கப்பலின் கேப்டன் மூத்தவரா அல்லது இளையவரா என்று ஆராய்ந்து, பிரத்யேக விசில் ஒன்றை ஊதி வணக்கத்தை செலுத்துகிறது. இது கடற்படைக்கே உரித்தான மரியாதை.
போர் இல்லாத நேரத்தில், கடற்படை பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கூட்டுப்பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. கூட்டாக மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டிய சூழல் ஏற்பட்டால் அப்போது ஏற்படக்கூடிய சிக்கல்களைத் தீர்க்கும் வகையில் இந்த பயிற்சிகள் பெரிதும் உதவும்.
உலகின் பெரும்பாலான வணிகப் பொருட்கள் கடல் வழியே செல்வதால், அதிலும் குறிப்பாக இந்தியப் பெருங்கடல் பகுதியில் செல்வதால், இந்திய கடற்படை, இந்த வாணிபத்திற்கு பாதுகாப்பு வழங்கும் முக்கிய பொறுப்பினைக் கொண்டுள்ளது. மேலும், நமது பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் வேறு யாரும் அத்துமீறி நம் வளங்களை கொள்ளையடிக்காமல் தடுக்கும் பொறுப்பும் கடற்படைக்கு உண்டு.
கடலில் நம் நாட்டின் எல்லை. 12 கடல் மைல்கள் (22 கிலோமீட்டர்). பிரத்யேக பொருளாதார மண்டலம் 200 கடல் மைல்கள் (370 கி.மீ).
முப்படைகளிலும் விருந்தோம்பலுக்கு கடற்படைதான் சிறந்த படை என்பார்கள். நாங்கள் தங்கியிருந்த போது அதனை நன்கு உணர்ந்தோம்.
கடலுக்கு சென்ற மீனவர்கள் திரும்பி வருவாரோ என்று அவர் குடும்பம் காத்திருப்பது போல், கடற்படை வீரர்களின் குடும்பத்தினரும் காத்திருப்பது உண்டு.
3 comments:
பல நாட்களுக்கு பிறகு ஒரு தமிழ் வலைப்பதிவை படிக்கிறேன். எனக்கும் போர்க்கப்பலை பார்க்க ஆசையாக உள்ளது!
போர்க்கப்பல்களுக்கு செல்வது எளிது. அவ்வப்போது துறைமுகங்களுக்கு வெளிநாட்டு போர்க்கப்பல்கள் வருவதுண்டு. இந்த கப்பல்களைக்காண அனுமதிப்பார்கள். அப்போது இலவசமாக உள்ளே சென்று வரலாம்.
பிரமித்தேன்................
Post a Comment