ஒற்றையடிப்பாதை போன்று ஒரு வண்டி செல்வதற்கு மட்டும் தான் பாதை அமைக்கப்பட்டு இருந்தது. நான் சாலை என்று குறிப்பிடாததற்கு காரணம், பல இடங்களில் சாலைக்கான அறிகுறிகளே கிடையாது. சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தை கடக்க 3 மணி நேரம் ஆயிற்று. வழியெங்கும் பாறைகளைப்போட்டு கரடு முரடாக பாதை அமைத்து இருந்தனர். பல இடங்களில் நாங்கள் வண்டியைவிட்டு இறங்கி நிற்க அந்த இடத்தை வண்டி கடந்த பின் ஏறினோம்.
வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் கோவேறு கழுதைகள் மூலம் தான் அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
நாங்கள சென்ற இந்த இடம் சீன எல்லையில் அமைந்து உள்ளது. சீனா சிக்கிமை இந்தியாவின் ஒரு அங்கம் என்று அங்கீகரித்தாலும், நாம் நமது எல்லைகளை கண்காணிப்பது அவசியம் என்பதால் இங்கு நம் படைகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இந்திய சீன எல்லையில் சர்வதேச எல்லைப்பகுதியில் இந்திய முகாமிற்கு அழைத்துச்செல்லப்பட்டோம். இங்கு பணியமர்த்தப்படும் வீரர்கள் முதலில் மூன்று கட்டமாக உடல் நிலைபழக்குதலுக்கு ஆட்படுத்தப்பட்டு தான் பணியமர்த்தப்படுகிறார்கள். அதாவது 9000 அடி உயரத்தில்3 நாட்களும் 12 அயிரம் அடி உயரத்தில் 7 நாட்களும் அதற்கு மேல் 3நாட்களும் தங்க வைக்கப்படுகின்றனர். அப்போது சிறு சிறு உடற்பயிற்சிகள் மட்டுமே செய்ய வேண்டும். பின்னர் அவர்கள் உடல்நிலை, இரத்த அழுத்தம் போன்றவை பரிசோதிக்கப்பட்டு மருத்துவர் அனுமதித்தால் மட்டுமே பணியமர்வு, இல்லையெனில் மீண்டும் உடல் பழக்கும் முகாமில் தங்க வேண்டும்.
12000 அடிக்கு மேல் போனதுமே, பிராணவாயு இல்லாமல் மூச்சு திணறுகிறது. வெறும் பாறைகளாக இருப்பதால் மரம் செடி கொடிகள் ஏதும் இல்லை.
சிறு சிறு ஒட்டுண்ணிச்செடிகள் தான் காணப்படுகின்றன. என் மொபைல் போன் எவ்வளவு சிறியதாக தெரிகிறது என்பதை அருகில் உள்ள படத்தில் பாருங்கள். இந்த செடியின் இலை அவ்வளவு பெரியது.
இதன் காரணமாக ஆக்சிஜன் குறைவாக இருக்கிறது என்கிறார்கள் இராணுவ அதிகாரிகள். வீரர்களின் கண்காணிப்பு முகாம் என்பது சிறு கல் கூடாரம் தான்.
குளிர் காலத்தில் மைனஸ் 30 டிகிரி வரை குளிரடிக்கும். நாங்கள் சென்றபோது 2 டிகிரி குளிராம். ஒரே பனிமூட்டம். மேகம் சூழ்ந்து திடீரென பூத்துவாரல் மழை பெய்தது. எங்களை வரவேற்க கூடாரம் அமைத்து இருந்தார்கள். ஒரே நேரத்தில் இவ்வளவு விருந்தினர் (15 பேர்) இங்கு வந்தது இதுவே முதல் முறை என்றார்கள். வழக்கமாக ஓரிரு உயர் அதிகாரிகள் வருவார்கள். மற்றபடி இங்கு இந்த படைப்பிரிவின் கமாண்டிங் அதிகாரி யான கர்னல் அந்தஸ்திலான அதிகாரி அவர்களுடன் தங்குகிறார்.
வீரர்களுடன் தங்கும் அதிகாரிகளைக் கண்டபோது வித்தியாசமாக இருந்தது.
ஏனெனில், இராணுவத்தைப்பொருத்தவரை அதிகாரிகள் மற்றும் இதர வீரர்களுக்கும் இடையில் பதவி நிலை இடைவெளி அதிகம். ஆனால் இங்கு அவர்கள் ஒன்றாக இருக்கிறார்கள்.
வீரர்கள் தங்கும் இடங்கள் நம் ஊர் புயல் கூண்டு போன்று, சரக்கு கூடாரம் போன்று இருக்கிறது. உள்ளே 15-20 படுக்கைகள் நெருக்கமாக இருக்கின்றன. குளிர் என்பதால், உள்ளேயே சமையல் நடக்கிறது. இதைத் தவிர வெப்பமூட்டுவதற்காக சிறு மண்ணெண்ணை அடுப்பு ஒன்றை அமைத்திருக்கிறார்கள்.
ஒரு கேனிலிருந்து மண்ணெண்ணை சொட்டுசொட்டாக விழும்படி சிறு குழாய் அமைத்திருக்கிறார்கள். அந்த மண்ணெண்ணை எரிகிறது. அந்த வெப்பம் தான் கூடாரத்தை ரெப்ரெஜிரேட்டராக்காமல் தடுக்கிறது. உள்ளே தீயும் புகையும், கார்பன் மோனாக்சைடு விஷவாயுவை உருவாக்கிவிடும் என்பதால், ஒரு புகைபோக்கி வைத்து புகையை வெளியேற்றுகிறார்கள். கண்டக்ஷன் கோட்பாடு படி அந்த புகைபோக்கியின் வெப்பமும் அறையை உஷ்ணப்படுத்துகிறது.
இந்த மண்ணெண்ணை தான் இவர்களின் உயிர் நாடி. வீரர்கள், ரோந்து பணிக்காக 15 நாட்கள் வரை 7 பேர் கொண்ட பிரிவாக செல்ல வேண்டும். அப்போது அவர்கள் தங்கள் உணவு, இரவு படுக்க குளிர் படுக்கை மற்றும் தொலைதொடர்பு கருவிகளை கொண்டு செல்ல வேண்டும். இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை தாங்கள் இருப்பிடத்தைப்பற்றி அவர்கள் தெரிவித்துக்கொண்டே இருக்க வேண்டும். பிராணவாயு இல்லாததால் நான் உள்பட எங்களுடன் வந்த பலருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. எங்களை மெதுவாக நடக்கும் படியும் அதிகம் பேசவேண்டாம் என்றும் அறிவுறுத்தியும் இருந்தார்கள். நாங்கள் சென்ற பகுதியில் கோர்க்கா படையினர் பணியமர்த்தப்பட்டு இருந்தார்கள். எங்களைப்பார்த்த வீரர்கள் பரவசம் அடைந்தனர். அவர்களைப்பார்த்ததும் நான் பரவசம் அடைந்து அவர்களிடையே சொற்பொழிவு நிகழ்த்தினேன். சைனிக் சமாச்சாரில் கோர்க்காக்கள் பற்றி நாங்கள் எழுதிவந்ததைப்பற்றி குறிப்பிட்டேன். அவர்கள் வீரம் பற்றியும், அவர்கள் இங்கு ஆற்றும் சேவைப்பற்றியும் நான் பெருமிதத்துடன் அரைகுறை இந்தியில் பேசினேன். உணர்ச்சிவசப்பட்டு வந்தே மாதரம், பாரத் மாதா கீ ஜெய் போன்ற கோஷங்களை எழுப்பினேன். வீரர்களும் என்னுடன் சேர்ந்தனர். பின்னர் நாங்கள் திரும்புகையில், எங்கள் ஜிப்சியை ஓட்டிய வீரர் சொன்னார், சாப். நீங்கள் ஆற்றிய உரை மிகவும் பிரமாதம். உங்களால், வீரர்களின் ஒழுங்குணர்வு அதிகரித்தது என்றார். நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
எங்களால் இந்த பகுதியில் ஓரிரு மணிநேரம் இருக்க முடியவில்லை. ஆனால் இங்கு மாதக்கணக்கில் (இரண்டு வருடம் பணியமர்த்தப்படுகிறார்கள்) இங்கே எப்படி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒரு முறை கீழே வந்தால், அவர்கள் எவ்வளவு நாள் கீழே தங்குகிறார்கள் என்பதைப் பொருத்து மீண்டும் உடல் பழக்கு முகாமில் மீண்டும் தங்க வேண்டும். மொத்தத்தில் நம் வீரர்கள் இங்கு தங்கள் உடல் வருத்தி எல்லையைக் காப்பாற்றி நம்மை நிம்மதியாக உறங்கச்செய்கிறார்கள்.
3 comments:
நல்ல செய்தி.
இந்திய வீரர்களுக்கு ஜே.
த.சங்கரன்.
அருமை.. :)
ஜெய் ஹிந்த்... :)
Nice report about an exemplary work at an extraordinary place.
Post a Comment