Monday, October 18, 2010

வடகிழக்கும் இந்திய விமானப்படையும்!!!!!!!1

விமானப்படை என்றால், விமானத்தில் பறந்து சென்று எதிரியின் நிலைகள் மீது குண்டு வீசுவது தான் ஒரே பணி என்று நம்மில் பலர் நினைக்கலாம். (சில காலம் வரை நானும் அப்படித்தான் நினைத்தேன்). இந்திய விமானப்படை வெறும் போர்விமானங்களை மட்டும் இயக்கவில்லை, வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் காஷ்மீரின் நெடுந்தொலைவுப்பகுதிகளின் வாழ்வாதாரமாகவும் திகழ்கிறது என்பதை நேரில் கண்டுணரும் அரிய வாய்ப்பு கிடைத்தது.

ஆயுதப்படைகள் பற்றிய புரிதலை மேம்படுத்தும் பயிற்சிக்கென நாங்கள், (நான் உட்பட நாடெங்கிலுமிருந்து 31 செய்தியாளர்கள்) ஒரு மாத காலம் வடகிழக்கு மற்றும் விசாகப்பட்டினத்தில் உள்ள ஆயுதப்படை தளங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டோம். விமானப்படை குறித்து அறிந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாம் மாநிலம் தேஜ்பூர்.

குவஹாத்தியில் இருந்து சாலை மார்க்கமாக நாங்கள் தேஜ்பூர் அழைத்துச்செல்லப்பட்டோம். வழியெங்கும் பச்சைப் பசேலென வயல்வெளிகள், வீட்டுக்கு வீடு சிறு குளம், அதில் மீன்கள் வளர்க்கப்பட்டு வீட்டு சமையலுக்கு பயன்பட்டு வந்ததைக் கண்டோம். அசப்பில் கேரளாவை பிரதிபலிக்கும் பசுமை. பாக்கு மரத்தில் வெற்றிலைக் கொடிகளை பரவ விட்டு இருந்தார்கள். இந்த அழகைக் கண்டு மயங்கி சுமார் 5 மணி நேரப்பயணத்திற்குப் பின் தேஜ்பூரை வந்தடைந்தோம்.

குவஹாத்தியில் இருந்து நாங்கள் நினைத்த நேரம் புறப்பட முடியாது. இராணுவத்தின் ஒரு வாகனம் நிறை வீரர்கள் ஏறப்பட்டு முக்கிய இடங்களி்ல் ஒவ்வொரு வீரராக இறக்கிவிடப்படுகிறார்கள். ஆயுதம் ஏந்திய இந்த வீரர் கையில் துப்பாக்கியும், ஒயர்லெஸ் கருவியும். இவ்வீரர்களை Road Opening Party (ROP) என்று அழைக்கிறார்கள். காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இவர்கள் காவல் இருக்கிறார்கள். இந்த காலகட்டத்திற்குள் தான் இராணுவ வாகனங்கள் மற்றும் பிரமுகர்கள் வாகனங்கள் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. அசாமில் அதிக கிளர்ச்சியாளர்கள் இல்லாவிட்டாலும் உல்பா (அல்பா என்று அழைக்கிறார்கள்) தீவிரவாதிகள் எந்த நேரமும் தாக்குதல் நடத்தலாம் என்பதால் இந்த முன்னெச்சரிக்கை.
நாங்கள் காலையில் தொடங்கிய பயணத்தை பிற்பகலில் நிறைவு செய்தோம்.

இனி தேஜ்பூரைப்பற்றி.

தேஜ்பூர் அசாம் மாநிலத்தின் சோனிட்பூர் மாவட்டத்தின் தலைநகர். பிரம்மபுத்திரா நதியின் வடக்குக்கரையில் அமைந்துள்ளது. சீன எல்லைக்கு அருகில் உள்ள இடம். போர்த்திறன் சார்ந்த முக்கியமான பகுதி. சீனா ஒருவேளை தாக்குதல் நடத்தத் துணிந்தால் இந்த பகுதி நமக்கு முக்கியமான பகுதியாக விளங்கும். இதன் காரணமாக இந்த நகரில் உள்ள விமானப்படை நிலையத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. மிக் 21 ரக போர்விமானங்களின் ஸ்குவாட்ரன்கள் இயங்கிவந்த இந்த விமான தளம் இந்த விமானங்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியதும் சில ஆண்டுகள் செயலற்று கிடந்தது.

இந்த விமானப்படை நிலையத்திற்கு புத்துயிரூட்டும் வகையில் நமது முன்னணி போர் விமானமான சுகோய்- 30 எம்.கே.ஐ. விமானங்களின் பிரிவினை இங்கு பணியமர்த்த அரசு முடிவ செய்தது. அமைதிக்காலங்களில் இந்த விமான நிலையம், விமானிகளுக்கு பயிற்சி அளிக்கும் இடமாக திகழ்கிறது. ஆனால் இது மிக முக்கியமான இடமாகும். (நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக மிகவும் நுணுக்கமாக செல்ல வேண்டாம் என்ற கோரிக்கையை முழுமையாக ஏற்போமே). சீனா ஒரு வேளை நம் மீது படையெடுக்க முனைந்தால், வான்வழித்தாக்குதலில் ஈடுபட முயற்சித்தால், அது குறித்த முன்னெச்சரிக்கை விடுக்கவும் திருப்பித்தாக்குதல் நடத்தவும் இந்த விமானப்படை நிலையம் பெருமளவு உதவும்.

இந்த விமானப்படை நிலையத்தில் உள்ள வீரர்கள் நாடெங்கிலும் இருந்து விமானப்படையில் சேர்ந்து, சுழல் முறையில் இங்கு நியமிக்கப்படுபவர்கள். அவர்கள் தங்கள் குடும்பத்துடன் இங்கு வசிக்கும் வகையில், நிலையத்தின் உள்ளும் வெளியிலும் குட்டி நகரமே செயல்படுகிறது.
அவர்கள் நல்வாழ்வைக்கவனித்துக்கொண்டால் தானே அவர்களும் எல்லையில் தங்கள் காவல் பணிகளைத் தொடர முடியும்?
தேஜ்பூர் மட்டுமில்லாது இப்பகுதியைச்சுற்றி ஏராளமான சிறு சிறு விமானப்படை நிலையங்கள் உள்ளன. மோகன்பாரி, ஜோர்ஹாட், சவுபா என அதிகம் கேள்விப்படாத விமான நிலையங்கள் உள்ளன. இங்கு சிவிலியன் விமானங்கள் ஓரிரு விமான நிலையங்களில் இயக்கப்படுகின்றன. மீதமுள்ளவை விமானப் படையால் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.
விமானப்படையின் போக்குவரத்து விமான ஸ்குவாட்ரன் ஒன்று இங்குள்ள விமான நிலையத்தில் இருந்து இயங்குகிறது. மற்றபடி, அனைத்து விமானப்படை நிலையங்களிலும் ஹெலிகாப்டர் ஸ்குவாட்ரன்கள் இயங்குகின்றன.

போர் விமானங்களை ஓட்டுவதற்கு ஒரு விமானியும், ஆயதங்களை செலுத்த ஒரு துணைவிமானியும் என இருவர் போதும். ஆனால் அவர் வெற்றிகரமாக விண்ணில் பறந்து மீண்டும் தரையிறங்க நூற்றுக்கணக்கான விமானப்படை வீரர்கள் தரையில் பாடுபட வேண்டும். சாலை மார்க்கமாக வாகனம் செல்லும் போது பழுதடைந்தால் வழியில் நிறுத்தி பழுது பார்க்கலாம். வானில் பறக்கும் போது விமானம் பறக்கும் போது பழுதடைந்தால், விமானி அந்த விமானத்தை தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டால், விமானத்திலிருந்து வெளியேறுவதைத்தவிர வேறு வழியில்லை. இன்றைக்கு ஒரு போர் விமானத்தின் விலை ரூ250 கோடி முதல் 500 கோடி வரை செலவாகிறது. பராமரிப்பு இன்றி விமானத்தை விபத்திற்குள்ளாக்குவது நாட்டையே தற்கொலைக்குத் தள்ளுவதற்குச் சமம். இங்கு தான் இந்திய விமானப்படையின் பொறியாளர்கள் பங்கு இருக்கிறது. (மிக்-21 ரக விமானங்கள் அதிக அளவி்ல் விபத்திற்குள்ளாவதற்கு பல காரணங்கள் உள்ளன. அது பற்றி பின்னர் அலசலாம்).

இந்த வகையில் தேஜ்பூரில் சுகோய் விமானங்களின் பராமரிப்பு மற்றும் பழுது பார்ப்பு பிரிவு வீரர்கள் இங்குள்ள விமானங்களை எந்த நேரத்திலும் பறப்பதற்கு ஏற்ற நிலையில் பராமரிக்கிறார்கள்.

எல்லைப்பகுதியில் இராணுவ வீரர்கள் மட்டுமின்றி, விமானப்படை வீரர்களும் காவல்புரிகின்றனர். மொபைல் அப்சர்வேசன் பிளைட் என்று அழைக்கப்படும் 12 வீரர்கள் கொண்ட குழு சர்வதேச எல்லைப்பகுதியில் சுழல்முறையில் முகாமிட்டு, எதிரி நாட்டின் விமானங்கள் ஊடுருவலை இரவு பகலாக கண்காணிக்கிறார்கள். இப்பகுதி முழுவதும் மலைப்பகுதி என்பதால், ராடார்கள்  மூலம் தாழ்வாகப்பறக்கும் விமானங்களைக் கண்காணிப்பது எளிதல்ல என்பதால் இந்த குழுக்கள் பல இடங்களில் முகாமிட்டு கண்காணிக்கிறார்கள். ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், உடனே கட்டுப்பாட்டறைக்கு அவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.  இதையடுத்து எல்லைப்பகுதியில் உள்ள விமான நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டு போர்விமானங்கள் தயார்நிலையில் நிறுத்தப்படும். அவசியம் ஏற்பட்டால், அச்சுறுத்தலை சரிகட்டும் பணியில் ஈடுபடுவார்கள். பல இடங்களில் நிலவறைகள் கட்டப்பட்டு கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறைகள் இயங்குகின்றன. இரவு பகலாக நமது வீரர்கள் கண்கொத்திப் பாம்பாக கண்காணித்து வருகின்றர். எல்லாம் நாம் நிம்மதியாக நமது பணிகளை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான்.

சரி போர் விமானங்களை எதிரிகளை சமாளிக்கப்பயன்படுகிறன என்பது சரி. போக்குவரத்து விமான ஸ்குவாட்ரன் எதற்கு, ஹெலிகாப்டர் ஸ்குவாட்ரன் எதற்கு என்று கேட்கலாம்.
இங்குள்ள இராணுவ வீரர்கள் ஏன் சிவிலியன்களின் உயிர்நாடியே இந்த போக்குவரத்து விமானங்களும் ஹெலிகாப்டர்களும் தான்.
இப்பகுதி முழுவதும் மலைகளும் ஆறுகளும் தான். லேசான மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டுவிடும். அப்போது வான்வழியேதான் அத்தியாவசியப் பொருட்கள் ஏற்றிச்செல்லப்பட வேண்டும். மி-17 ரக ஹெலிகாப்டர் அதிகபட்சம் 18 பேரையும் அல்லது 2.5 டன் எடையையும் ஏற்றிச்செல்லத்தக்கது. சீத்தா மற்றும் சேத்தக் ஹெலிகாப்டர்கள் ஓரிருவரை கொண்டு செல்லத்தக்கது,

காயமடைந்தவர்கள், மருத்துவ உதவி தேவைப்படுபவர்கள் என அனைவருக்கும் இந்த விமானங்கள் தான் ஆபத்பாந்தவன், அனாதரட்சகன்.

இதைத்தவிர ஏ.என்-32 ரக விமானங்கள் தான் முதுகெலும்பாக திகழ்கிறது. இந்த விமானங்களை மலைகளுக்கிடையே மிகச்சிறிய ஓடுபாதையில் விமானத்தை லாவகமாக இறக்கி ஏற்றும் திறன் பெற்றவர்கள் நம் விமானிகள். தரையிறங்க முடியாத நிலையில் உள்ள இடங்களுக்கு வானிலிருந்தே பொருட்களை போடும் வழக்கமும் உள்ளன. விமான ஆம்புலன்ஸ் ஒன்றையும் இந்திய விமானப்படை உருவாக்கி, சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு வழங்கி வருகிறது.

இதைத்தவிர, எல்லைப்பகுதியில், விமான நிலையத்தை பராமரிக்க வழியில்லாத இடத்தில் ஹெலிகாப்டர்களை இறக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. அருணாச்சல பிரதேச எல்லையில் பாசிகட், ரோயிங் ஆகிய பகுதிகளில் உள்ள இந்த Advanced Landing Ground (ALH) களுக்கு ஹெலிகாப்டர் மூலம் அழைத்து செல்லப்பட்டோம். தரைவழியாக இந்தப்பகுதியை அடைவது என்பது கால்நடையாக நிலவுக்குச் செல்ல முயற்சிப்பது போல்.
வழியெங்கும் பிரம்மபுத்திரா நதி அமைதியாக பரந்து விரிந்து பாய்ந்து வருகிறது. எங்கு பார்த்தாலும் தண்ணீர். தண்ணீர் இல்லாத இடங்களில் விவசாயம் அல்லது காடு. இப்படித்தான் இந்த பகுதிகள் இருக்கின்றன. மேலிருந்து சாலைகளையோ பாதைகளையோ காண முடியவில்லை.

பாசிகட்டையும் தாண்டி உள்ள ஓர் இடத்திற்குத்தான் எங்களை அழைத்துச்செல்வதாக இருந்தது. ஆனால் வானிலை மோசமாக இருந்ததால் பாசிகட் வந்தோம். அப்போது தெரிந்தது, பனிமூட்டம் காரணமாக வானம் எது மலை எது என்று தெரியாமல் ஹெலிகாப்டர்கள் ஏன் விபத்திற்குள்ளாகின்றன என்று.வானிலை தெளிவாக இருந்த பாசிகட்டில் எங்கள் ஹெலிகாப்டர் தரையிறங்கியபோது அது கால்பந்து மைதானத்தில் தரையிறங்கியது போன்று தான் இருந்தது. இப்பகுதி மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை மாவட்ட நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு ஏற்ப கொண்டுவரும் பெரும் பணியை இந்திய விமானப்படை மேற்கொள்கிறது. இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் தவிர பவன் ஹன்ஸ் ஹெலிகாப்டர் நிறுவனத்தின் ஹெலிகாப்டர்களும் உள்ளுர் மக்களை ஏற்றி வருகின்றன.

நாங்கள் இரு ஹெலிகாப்டரில் பாசிகட்டில் தரையிறங்கிய சிறிது நேரத்தில் பவன்ஹேன்ஸ் ஹெலிகாப்டர் ஒன்று வந்தது.  அந்த ஹெலிகாப்டரை எங்கு இறக்குவது என்று தெரியாமல் விமானி தடுமாறினார். எங்களுடன் வந்த விமானப்படை ஊழியர்கள் விமானிக்கு தரையிறங்க வழிகாட்டினர்.
சிகிச்சைக்காக நெடுந்தொலைவுப்பகுதியில் உள்ள ஒருவரை மீட்கச் செல்ல வேண்டியிருப்பதாகவும், இரண்டு நாட்களாக மோசமான பருநிலை நிலவுவதால் செல்லமுடியவில்லை என்றும், எப்படியும் நோயாளியை மீட்டு சிகிச்சை அளிப்போம் என்று விமானப்படை அதிகாரிகள் கூறியபோது, அவர்கள் கண்ணில் தெரிந்த உறுதிப்பாட்டை விவரிக்க வார்த்தை கிடையாது.

இன்னும் வரும்.......

5 comments:

ஜெஸிலா said...

அரிய தகவல். பகிர்வுக்கு நன்றி. இன்னும் சுருக்கியிருக்கலாம். அளவை பார்த்ததும் பதைக்க வேண்டியுள்ளது ;-) ஆனால் தோய்வில்லாமல் இருந்தது.

Annadurai said...

நன்றி சிதம்பரம். அந்த இடங்களுக்கெல்லாம் உங்களோடு நாங்களும் வந்திருந்தது போல உணரும் வகையில் எழுதி இருக்கிறீர்கள். வாழ்த்துகிறேன். However, I have a small advice. Avoid editorializing. Make your readers also feel what you felt from facts, figures and descriptions. Best of luck.

அகில் பூங்குன்றன் said...

சூப்பர் தகவல்கள். நிறைய எழுதுங்கள். அறிய ஆவலாய் உள்ளேன்

Siva Ranjan said...

அருமையான தகவல்கள்...... கடைசி பத்தியை படிக்கும்பொழுது உன்மையில் நெகிழ்ந்தேன்.. வார்த்தைகளை அருமையாக கையாளுகின்றீர்கள்.. தொடர்ந்து பதியுங்கள் படிக்க ஆவலாய்யுள்ளேன்... :)

oceansprings said...

There are seven things that you must have, to be successful
at anything you choose in life…
Sense of Purpose
People don’t fail because of a lack of talent or ability, but
through a lack of purpose. Set goals … visualise and imagine
what it will be like having achieved them. You’ll be annoyed
how quickly they materialise in your life!
Excellence
Don’t settle for doing anything less than your best at everything
you do. It does terrible psychic damage when you settle for
“second best” … it begins a long, slippery road!
Character
Be a person who can be relied upon. Character is doing what you
promised to do, long after the mood in which you said it has passed.
Responsibility
Take responsibility for your actions – good and bad. Many lessons
can be learned from our most painful mistakes … learn the lesson,
leave the pain! Two types of people should be avoided … those who
brag about their mistakes … and those who claim they’ve never made any.
Effort
Without hard work, discipline, diligence and perseverance, success is
impossible. The only place success comes before work is in the dictionary.
This “quick-fix” world would have you believe something different.
Don’t be fooled!
Time Management
If I credited your bank account with £86,400 every morning – and every
evening I took back whatever you didn’t use what would you do? You’d
draw out every penny and invest it, of course. Well each day we get
credited with 86,400 seconds … so, in what are you going to invest them?
Stick with It
Stickability is major. Big shots are usually little shots that just
kept on shooting. Winners never quit, quitters never win!
Now, go and be the success you’ve always wanted to be.

if you agree with the above and would like to make a difference to yourself...... visit http://oceansprings.smartmediadesktop.com and see the video (3 min ). after whcih put in your name, mail id and contact number and download the application for FREE. use it..... like it........ and send me a mail to thank me.

Post a Comment