Saturday, April 13, 2013

விந்தை மனிதர் ஆனைமுத்து!

தோழர் வே. ஆனைமுத்துவை நண்பர் அண்ணாதுரை எனக்கு அறிமுகம் செய்தபோது வியப்பாக இருந்தது. வெண் தாடியுடன், கணீரென்ற குரலுடன், பெரியாரை பிரதிபலிக்கும் உருவத்திலிருந்த அவரை நான் தில்லியில் தான் முதன் முதலாக சந்தித்தேன்.

பெரியாரின் சீடர். தன் எழுத்துக்களுக்கு வாரிசு என்று பெரியாரால் அறிவிக்கப்பட்டவர். பெரியாரின் கொள்கைகளை பரப்புவதில் தன் வாழ்நாளை தியாகம் செய்து வருபவர். 89 வயது இளைஞர். சுறுசுப்பாக சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய பணிகளை செய்து வருகிறார்.
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தலைநகர் தில்லி வந்து, ஏதாவது ஒரு எம்.பி. வீட்டிலோ, அல்லது ஏதாவது அதிகாரி வீட்டிலோ தங்குகிறார். தினமும் ஏதாவது ஒரு தலைவரை சந்தித்து இட ஒதுக்கீடு என்றால் என்ன, எதற்காக இட ஒதுக்கீடு என்று அவருக்கு விளக்குவது தான் அவருடைய வேலை. அந்த தலைவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தால், இட ஒதுக்கீடு பற்றி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வைத்து, அவர் வேறு தலைவராக இருந்தால் அவருடைய செல்வாக்கை பயன்படுத்தி இன்னொரு தலைவரை சந்தித்து அவரிடமும் இட ஒதுக்கீடு பற்றி விளக்கி, இன்றைக்கு இட ஒதுக்கீடு பற்றிய விழிப்புணர்வு ஓரளவு தலைநகரில் உள்ள தலைவர்களுக்கு ஏற்பட்டு இருந்தால் அதற்கு காரணமாக இருந்தவர், இருப்பவர் தோழர் வே. ஆனைமுத்து.இட ஒதுக்கீடு மட்டுமின்றி, இலங்கை தமிழர் பிரச்சினையிலும் தில்லியில் குரல் எழுப்பி, அனைவரையும் திரட்டி வருகிறார்.

அவருக்கு தினமும் ஒரு வேளை உணவு தான்.  ஏப்போதாவது தேனீர். அவ்வளவு தான் அவருடைய உணவு. அந்த ஒரு வேளை உணவும், நன்கு வேகவைத்த சோறு, தயிர், ரசம்  மற்றும் பருப்பு கூட்டு இவ்வளவு தான். உணவு விஷயத்தில் கட்டுப்பாடாக இருப்பது தான் அவரது இளமையின் ரகசியம்.இட ஒதுக்கீடு பற்றிய அரசாணைகள், அரசியல் அமைப்புச் சட்டத்தில் உள்ள ஓட்டைகள் குறைபாடுகள் அனைத்தும் அத்துபடி. இட ஒதுக்கீடு என்றால் என்ன என்று ஒருமுறை தில்லி தமிழ் பள்ளியில் வகுப்பு எடுத்தார்.
இப்போதும் தில்லியில் சுற்றுப்பயணம், தொடர்ந்து தன் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த முயற்சிகளுக்கு உடனே பலன் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் கண்டிப்பாக ஒரு நாள் பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார். அவரது முயற்சிக்கு யார் சிறு உதவி செய்தாலும் வாயாற புகழ்கிறார். சிறு பிள்ளை போல் பாராட்டுகிறார். அதே நேரத்தில் நேரடியாகவும் திட்டுகிறார். தமிழ் மட்டுமின்றி, ஆங்கிலத்திலும் நல்ல புலமை. இந்தி பேச வரவில்லை என்ற வருத்தம் இருந்தாலும், அதைப்பற்றிக் கவலைப்பட வில்லை. 4 இளைஞர்கள் எனக்கு இருந்தால், என்னுடைய பயணம் இன்னும் தீவிரமாக இருக்கும் என்கிறார். எனக்குத்தான் கட்டுப்பாடுகள்.

89 வயதில் மக்களுக்காக பாடுபடும் ஆனைமுத்து அய்யா போன்றவர்களும் இருக்கிறார்கள். என் பார்வைக்கு அவர் விந்தை மனிதராகவே தென்படுகிறார்.
பெரியார் சிந்தனைகள் என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள புத்தகத் தொகுப்புகள் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்கள்.

அவர் நட்ட மரத்தின் பழத்தை அவர் பிள்ளைகள் தின்ன மாட்டார்கள். நாம் தின்போம். நம் வம்சா வளியினர் தின்பார்கள்.

1 comment:

வவ்வால் said...

ஆனைமுத்து அவர்களின் சில பிரசுரங்கள் படித்துள்ளேன்,ஆனால் டெல்லியில் சென்று இவ்வாறு கருத்துரைகளும் பரப்புவதை இப்பொழுது தான் அறிகிறேன். இந்த வயதிலும் உழைப்பது பாராட்டுக்குரியது. ஒரு புதிய செய்தியை பதிவாக்கியுள்ளீர்கள்! நன்றி!

Post a Comment