Sunday, October 3, 2010

எந்திரன்

ரஜினி காந்த்தின் எந்திரன் படம் பார்த்தேன்.

கண்டிப்பாக பிரமிப்பாக இருந்தது.

கலாநிதி மாறன் தவிர வேறு யாராலும் இந்த படத்தை தயாரித்து இருக்க முடியாது. (!!!!!!!). அவ்வளவு பிரமாண்டம். ஆர்னால்டின் டெர்மினேட்டர் படத்தை எப்படி ஒருவர் நம்புவாரோ, அப்படி நம்பினால், எந்திரன் படுசூப்பர்.

ஹாலிவுட் காரர்கள் கூட இப்படி யோசித்து இருக்க மாட்டார்கள். நம்மவர்கள் கற்பனைக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை என்பதற்கு ஷங்கர் ஒரு எடுத்துக்காட்டு.

கதை என்னவோ ஒரு வரிக் கதை தான்.

படத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவு கதாபாத்திரங்கள் மட்டுமே. ஐஸ்வர்யா ராய் மீது ரஜினி வைத்திருந்த நம்பிக்கையை அவர் வீணாக்கவில்லை. அவ்வளவு அழகாக இருக்கிறார். பல படங்களில் பார்த்து சலித்து போய் இருந்தாலும், அழகு அழகுதானே??

காமெடிக்கு இந்த முறை யாரையும் துணைக்கு அழைக்கவில்லை. கருணாஸ் சந்தானம் என இருவர் மட்டுமே.
மற்றபடி, காட்சியின் பிரமாண்டங்கள் படத்தை புயல் வேகத்தில் கொண்டு செல்கிறது. வில்லனாக வரும் டேனி டென்ஜோப்பா இன்னும் மிரட்டுவார் என்று பார்த்தால், வில்லன் பாத்திரத்தை ரஜினியிடமே (ரோபோ) கொடுத்துவிட்டு அந்த ரோபோ கையாலேயே மடிந்து விடுகிறார். அப்புறம் என்ன ரஜினிக்கு போட்டி ரஜினி தான்.

”வரம் கொடுத்தவன் தலையில் நான் தான் கையை வைப்பேன்” வசனம் ஒன்று தான் பஞ்ச் டயலாக்)

61 வயது நிரம்பிய ரஜினிக்கு படத்தில் கதைப்படி என்ன வயது என்று யாரும் கணிக்க முடியாதபடி, விஞ்ஞானி கதாபாத்திரம். உருவம் 45 வயதுக்கு மேல் மதிக்கத்தக்கப்படிதான் இருக்கிறது. அவரை விட ரோபோ ரஜினி இளமையாகவும் அழகாகவும் இருக்கிறார்.

பாடல் ஒவ்வொன்றும் ஷங்கரின் உழைப்பைக்காட்டுகிறது. ஏனோ ரஹ்மானின் இசை ஒட்ட மறுக்கிறது. மச்சு பிச்சு (புதிய உலக அதிசியங்களில் ஒன்று) பகுதியில் படமாக்கப்பட்ட கிளிமாஞ்சாரோ பாடல், சர்வதேச தரத்திற்கு இணையானது. பிரபலமாகலாம்.

ரோபோ ரஜினி, 1000க்கணக்கான ரோபோ ரஜினியை உருவாக்கினார் என்பது காதில் பூந்தோட்டம் அல்ல, ராணுவ டாங்கியையே சுற்றுவது போல் உள்ளது.

மற்றபடி, நகைக்கடையில் ரோபோ ரஜினி நகைகளை அடுக்கித் தள்ள, நகைக்கடை அதிபர், ரஜினியிடம், நீங்கள் எப்படி தரப்போகிறீர்கள், கேஷா, கிரெடிட் கார்டா ? என்று கேட்க, “கன்” என்று கூறி துப்பாக்கியை எடுத்துக்காட்ட, என்ன நடக்கிறது என்று நாம் உணர்ந்து சிரிப்பதற்குள் அடுத்த காட்சிக்கு தாவிவிடுகிறார். தியேட்டரில் நீண்ட நேரம் சிரிப்பொலி கேட்கிறது.

உணர்ச்சிகளைப் பெறும் ரோபோ, காதல் வயப்பட்டு சோக வயப்படும்போது நிறையவே உணர்ச்சிகளைக்காட்டுகிறார்.

மற்றபடி சிவாஜி படத்தில் அழகான ரஜினிக்குத் தான் ரசிகர்கள் ஆதரவு இருக்கிறது என்பதை உணர்ந்தபின்னும், அதிகம் அழகான ரஜினியை இன்னும் காட்டியிருக்கலாமோ என்ற எதிர்பார்ப்பு ரஜினி ரசிகர்கள் மத்தியில் இருக்கலாம்.


எப்படி இருந்தாலும், தமிழ் சினிமாவை ஹாலிவுட் தரத்திற்கு கொண்டு சென்றதற்காக, சன் டிவி கலாநிதி மாறனுக்கும், இயக்குநர் ஷங்கருக்கும், 35 வருடங்களாக தன் மார்க்கெட்டை தக்க வைத்துக்ககொண்டிருக்கும் ரஜினிக்கும் தமிழ் கூறும் நல்லுலகம் பாராட்டியே தீர வேண்டும்.

உலகெங்கும் ரஜினி பற்றிய செய்திகளும், அவற்றில் ரஜினியை விமர்சித்து இருந்தால், அந்த பத்திரிகையை தமிழ் இளைஞர்கள் கடுமையாக சாடி வருவதும், அந்த பத்திரிகைகளுக்கு அதிர்ச்சியையும் வியப்பையும் தரக்கூடிய விஷயமாகும்.

படத்தை தாராளமாகப் பார்க்கலாம். குழந்தைகளுடன் பார்க்கலாம். மீண்டும் மீண்டும் திரையரங்கில் போய் பார்க்கலாம். (டிக்கெட் விலை தான் கொள்ளை விலையாக இருக்கிறது)

2 comments:

ஜெஸிலா said...

//ஹாலிவுட் காரர்கள் கூட இப்படி யோசித்து இருக்க மாட்டார்கள்// அப்படி என்னங்க புதுசா யோசிச்சுட்டாங்க? ‘டிரான்ஸ்பார்மர்’ பார்த்தீங்களா? அதில் டிரான்ஸ்பார்ம் ஆவதைவிடவா ‘எந்திரன்’ படத்தின் கடைசி காட்சி உங்களை மிரள வைத்தது? கதையில் என்ன புதுசு? ‘அழகிய தமிழ் மகனின்’ பிரதிபலிப்பு தெரிந்ததா இல்லையா? விஞ்ஞானம் அழிவில் முடியும் என்று நெகடிவா பேசப்பட்டிருக்கு. சங்கர் தான் சிறு வயதில் கற்பனை செய்த விஷயத்தை பணத்தை கொட்டி எடுத்திருக்கிறார். ஆனால் அவர் தன்னையே அப்டேட் செய்து கொள்ளவில்லை என்பதே இதில் புலப்படுகிறது. காரணம் ஒரு பாடலில் வரும் ஸ்டார் வார்ஸ் பார்த்து என்னுடன் வந்த குழந்தை இதை பிஎஸ்3-ல் விளையாடுவதாக சொன்னான். இப்படி அங்க இங்க பிச்சு எடுத்துவிட்டதுமில்லாமல் மற்ற படங்களை திரையரங்கை விட்டு ஓட செய்து எல்லா திரையரங்கிலும் ‘எந்திரனை’யே ஓட்டி மற்ற பட தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தகர்களின் வயிற்றில் அடித்து கொள்ளை அடிக்கிறார்கள். அதையும் நாம் அதிக விலை கொடுத்து மீண்டும் மீண்டும் திரையரங்கில் பார்க்க வேண்டுமோ?

chidambaranathan said...

நான் முதலிலேயே சொன்னேன். ஆர்னால்டு் படத்தை ஏற்றுக்கொண்டால் இதையும் ஏற்றுக்கொள்ளலாம். மற்ற திரைப்படத் தயாரிப்பாளர்களை வயிற்றில் அடிப்பது எல்லாம் அவர்கள் அவர்கள் காலத்திலேயே அனுபவிப்பார்கள். சராசரி ரஜினி ரசிகனாக எனக்கு இந்த படம் பிடித்து இருந்தது.

Post a Comment