Thursday, October 1, 2009

Unnaippol Oruvan -எனது பார்வையில்

கமல் ஹாசன் நடித்த உன்னைப்போல் ஒருவன் படத்தைக்காணும் நல்ல வாய்ப்பு கிடைத்தது.கதாநாயகனுக்கு கதாநாயகி இல்லாத படங்களைப் பார்த்துள்ளோம். பாடல்கள் இல்லாத படத்தைப்பார்த்து உள்ளோம். இசையே இல்லாத படமும் வந்துள்ளது. ஆனால் கதாநாயகனுக்கு என பெயர்கூட இல்லாத படத்தை கமல் ஹாசன் வழங்கியுள்ளார்.கதை இதுதான்.சென்னை மாநகரில் 5 இடங்களில் சக்திவாய்ந்த குண்டுகளை வைக்கிறார் கமல். வானுயர உயர்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் கட்டிடத்தின் மொட்டைமாடியில் தனது கட்டுப்பாட்டு அறையை ஏற்படுத்திக்கொள்ளும் கமல் அங்கிருந்து கம்ப்யூட்டர் உதவியுடன் சென்னை மாநகர கமிஷனரிடம் (மோகன்லால்) தொடர்பு கொள்கிறார். அனைத்து முடிவுகளையும் எடுக்கக்கூடிய அதிகாரம் பெற்ற ஒரு நபரை தயாராக வைத்திருக்கும்படியும். அவரிடம் தான் இனிமேல் பேசப்போவதாகக் குறிப்பிடுகிறார். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து தலைமைச் செயலாளரை (லட்சுமி) தனது அலுவலகத்திற்கு அழைக்கிறார். அதன் பின் கமல் ஹாசனிடம் பேசும் அதிகாரம் பெற்றவராக கமிஷ்னர் மோகன்லால், மேற்கொள்ளும் நடவடிக்கைகள், அவரது அணியினர் மேற்கொள்ளும் டீம்வொர்க் மீதமுள்ள கதை. வெடிகுண்டுகள் என்ன ஆகின்றன, அவர் கேட்ட முஸ்லிம் தீவிரவாதிகள் மற்றும் ஆயுதக் கடத்தல் காரர் ஆகியோர் கதை என்ன ஆனது என்ற சஸ்பென்சை நான் உடைக்க விரும்பவில்லை. கதாநாயகன் மோகன் லாலா? கமலா என்று பட்டிமன்றமே வைக்கலாம். அந்த அளவிற்கு இருவரும் நடிப்பில் மிரட்டுகிறார்கள். சென்னை நகர கமிஷ்னராக இவ்வளவு பொருத்தமாக அவர் பொருந்தி இருப்பது நமக்கு தங்கப்பதக்கம் போன்ற காவல்துறையை பெருமைப்படுத்தும் படங்களை நினைவுபடுத்துகின்றன. எதார்த்தத்திற்காக கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் வீடு போன்றே செட் போட்டு முதலமைச்சர் வீட்டை நம் கண் முன் கொண்டுவந்து நிறுத்திய தோட்டா தரணியை பாராட்டலாம். முதல்வராக கலைஞரே தலைமைச் செயலாளர் மற்றும் கமிஷ்னரிடம் தொலைபேசியில் பேசுவது, கமல் ஹாசனின் வீட்டில் இருந்து காய்கறி வாங்கி வருமாறு கூறும் குரலாக கவுதமியின் குரல் இருப்பது போன்ற நுணுக்கமான விஷயங்களை கவனத்தில் கொண்டுவந்ததற்காக கமல்ஹாசனைப்பாராட்ட வேண்டும்.
தமிழ் சினிமாவை உலகத்தரத்திற்கு உயர்த்திக்காட்டியே தீருவேன் என்ற கமல் ஹாசனின் முயற்சிக்கு இந்த படம் நிச்சயம் பெரிய திருப்பு முனையாக இருக்கும்.இதனை சராசரி ரசிகர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பதை பாக்ஸ் ஆபீஸ் வசூல் காட்டிக்கொடுக்கும். ஆனால் படித்த, ஆங்கிலப்படங்களைப் பார்த்து ரசித்து பிறருக்கு பரிந்துரைத்து மகிழும் தமிழ் ரசிகர்களுக்கு, குறிப்பாக கமல் ரசிகர்களுக்கு, தாங்களும் மற்றவர்களுக்கு பரிந்துரைக்க இந்த படம் உள்ளது.படம் பார்த்துவிட்டு திரும்பும்போது நம் மனதில் ஏற்படும் பிரமிப்பு அடங்கியபின் சில கேள்விகள் மனதில் எழத்தான் செய்கின்றன.குண்டுவெடிப்பிற்கு காரணமான 3 முஸ்லிம் தீவிரவாதி மற்றும் ஒரு இந்து வெடிமருந்து கடத்தல் காரனை மட்டும் சீட்டுக்குலுக்கிப்போட்டு தேர்வு செய்வதாக கமல் கூறுகிறார். இவர்களைக் கொல்ல தான் எந்த மதத்தைச்சேர்ந்தவனாகவும் இருக்கவேண்டியதில்லை, சாமான்ய இந்தியனாக இருப்பதே போதும் என்று வாதம் செய்கிறார். கமல் கூறும் இந்த காரணங்களை ஆயுதம் தூக்கி உணர்ச்சி மரத்துபோய் உள்ள தீவிரவாதிகளை எப்படி திருத்த உதவும்.மற்றபடி, கமல் சராசரி ரசிகனை சீட் நுனிக்கே வரவைக்க பல சினிமாத்தனங்களை கையாள்கிறார். கமிஷ்னரின் நம்பிக்கைக்குரிய இரண்டு இன்ஸ்பெக்டர்களில் ஒருவர் முஸ்லிம். தொடக்ககாட்சியிலேயே அவரை சந்தேகப்படும் வகையில் அறிமுகப்படுத்தியது, இரண்டாவது இன்ஸ்பெக்டருக்கு மனைவி குழந்தை சென்ட்டிமென்ட், ரயிலில் சென்றுகொண்டிருக்கும் மனைவியின் இருக்கைக்கு மேலே கமல் வைக்கும் ஒரு வெடிகுண்டு பை என அனைவரையும் பதபதைக்க வைக்கிறரார்.கமல் செய்த இந்த மா முயற்சிக்கு நாம் திருட்டு சி.டி. மூலம் படத்தைப்பார்க்காமல் தியேட்டரிலேயே பார்ப்பது தான் சரியான ஊக்கத்தை வழங்க முடியும்.
இந்த படத்தில் கமல் தனக்கு பெயர் எதையும் வைக்காததற்கு, அவர் பெயரை வைத்து அவர் இஸ்லாமியர்களுக்கு ஆதரவானவரா, எதிரானவரா, என்று நம்மை வேறு வகையில் சிந்திக்கவைக்காமல் பெயரே வைக்காமல் தான் சராசரி சாமான்யர்களில் ஒருவன் என்ற எண்ணத்தை நம் மனதில் ஏற்படுத்துகிறார்.படத்தின் இறுதியி்ல் அவர் இயங்கிக்கொண்டிருந்த இடத்தைக்கண்டுபிடித்து அங்கு வரும் கமிஷ்னரை பரிச்சியம் இல்லாமல் பார்க்கும் கமல், தான் தான் சென்னை மாநகர காவல் துறை கமிஷ்னர் என்று மோகன்லால் அறிமுகம் செய்யும் போது மெல்லிய அதிர்ச்சியை முகத்தில் காட்டுவது, கமல் ஹாசனுக்கு இதற்கு முன் கமிஷ்னரைத் தெரியாதா என்று நினைக்கத் தோன்றுகிறது. இன்ஸ்பெக்டர்களாக வரும் கணேஷ் வெங்கட்ராமன் மற்றும் பரத் ரெட்டி ஆகியோர் நீண்ட நாட்கள் மிடுக்கான போலீசாக நம்மை மிரட்டிக்கொண்டு இருப்பார்கள்.படம் இந்தியில் வந்த படத்தின் தழுவல் என்பது கொசுறு செய்தி.படத்தை இயக்கியவர் சக்ரி டொலட்டி.

No comments:

Post a Comment